வடமாநிலங்களில் வெட்டுக்கிளிகள் படையெடுப்பால் விலை உயர்ந்தது உளுந்தம்பருப்பு: மளிகை சாமான்களும் ‘கிடுகிடு’

தினகரன்  தினகரன்
வடமாநிலங்களில் வெட்டுக்கிளிகள் படையெடுப்பால் விலை உயர்ந்தது உளுந்தம்பருப்பு: மளிகை சாமான்களும் ‘கிடுகிடு’

விருதுநகர்: வடமாநிலங்களில் வெட்டுக்கிளிகள் பாதிப்பால் உளுந்து மூட்டைக்கு 800 வரை உயர்ந்துள்ளது. மளிகை பொருட்கள் விலையும் அதிகரித்துள்ளது.கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த போடப்பட்ட ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது. சென்னை மண்டலம் தவிர்த்து பிற பகுதிகளில் அனைத்தும் இயக்கத்திற்கு வந்துள்ளது. வடமாநிலங்களில் வெட்டுக்கிளிகள் படையெடுப்பால் பயிர்கள் சேதமாகி வருகின்றன. இதனால் வரும் மாதங்களில் புதிய வரத்து இருக்காது என்பதால் முதல் கட்டமாக ஆந்திரா, தஞ்சை உளுந்து மூட்டைக்கு 800 வரை உயர்ந்துள்ளது. வரும் வாரங்களில் உளுந்தம்பருப்பு விலை மேலும் உயரும். (அடைப்பிற்குள் கடந்த வார விலை): ஆந்திரா உளுந்து (100 கிலோ) 7,800 (7,000), தஞ்சை உளுந்து 7,700 (7,200) என அதிகரித்துள்ளது. ரேஷனுக்கு பாமாயில் மொத்தமாக விற்பனை செய்வதால் டின்னுக்கு ₹25 அதிகரித்துள்ளது. பாமாயில் (15 கிலோ) டின் 1,275 (1,250) என விற்பனையானது. விருதுநகர் மார்க்கெட்டிற்கு நாடு வத்தல் 100 மூட்டைக்கும் குறைவாக வரத்து உள்ளது. இதனால் குண்டூர் ஏசி வத்தல் குவிண்டால் ₹13,500, குண்டூர் வத்தல் குவிண்டால் 11,000, நாடு வத்தல் 8,500, முண்டு வத்தல் 11,000 என விற்பனையானது.வடமாநிலங்கள் மற்றும் சென்னையில் கொரோனா பரவலால் பருப்பு மில்கள் இயங்கவில்லை. சென்னை துறைமுகத்தில் சரக்குகளை ஏற்றி, இறக்க பணியாளர்கள் இல்லை. இதனால் குஜராத், மகாராஷ்டிரா, மத்தியபிரதேசம் மற்றும் பர்மாவில் இருந்தும் உளுந்து, பாசிப்பயறு ஏற்றி வரும் கப்பல்கள் தூத்துக்குடி துறைமுகத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளன. மேலும் பருப்புகள் ரயில் வேகன்கள் மூலம் தூத்துக்குடிக்கு வருகின்றன. இதனால் சரக்குகளை கையாளுவதில் கூடுதல் செலவு ஏற்படுகிறது. வரும் வாரங்களில் பருப்பு, பயறு உள்ளிட்ட உணவு பொருட்களின் விலை உயரும் என வணிகர்கள் தெரிவிக்கின்றனர்.

மூலக்கதை