வீடு கட்டுமான செலவு சதுரடிக்கு ரூ.200 உயர்வு

தினமலர்  தினமலர்
வீடு கட்டுமான செலவு சதுரடிக்கு ரூ.200 உயர்வு

சென்னை; சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில், புதிய வீடுகள் கட்டுவதற்கான கட்டுமான செலவுத் தொகை, சதுர அடிக்கு, 200 ரூபாய் வரை உயர்ந்துள்ளதால், வீடு கட்டுவோர் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.


ஊரடங்கால், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில், கட்டுமான பணிகள், 40 நாட்களுக்கு மேலாக முடங்கின. தற்போது, அரசு வழங்கிய தளர்வுகளால், படிப்படியாக பணிகள் துவக்கப்பட்டு வருகின்றன.இந்நிலையில், சிமென்ட் விலையில் ஏற்பட்டுள்ள உயர்வு, மணல் தட்டுப்பாடு, பணியாளர்கள் பற்றாக்குறை போன்றவற்றால், கட்டுமான செலவு வெகுவாக அதிகரிக்கிறது. ஏற்கனவே, திட்டமிட்ட தொகைக்குள் கட்டுமான பணிகளை முடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போதைய நிலவரப்படி, 5,000 சிறிய அளவிலான குடியிருப்பு திட்டங்களும், 500க்கும் மேற்பட்ட பெரிய அளவிலான திட்டங்களும் முடங்கிஉள்ளன. இவற்றில், 200 திட்டங்களில் மட்டுமே, பணிகள் துவங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன.

இது குறித்து, இந்திய கட்டுனர் வல்லுனர் சங்கத்தின் மாநில பொருளாளர், எஸ்.ராமபிரபு கூறியதாவது:சென்னை மற்றும் அதையொட்டிய மாவட்டங்களில், 1 சதுர அடிக்கான குறைந்தபட்ச கட்டுமான செலவு, 1,800 ரூபாயாக மதிப்பிடப்பட்டு வந்தது. கூடுதல் வசதிகள் அடிப்படையில் அடுக்கு மாடி திட்டங்களில், இத்தொகை வேறுபடும்.இந்நிலையில், சிமென்ட், பணியாளர்கள் பற்றாக்குறை, கொரோனா தடுப்புக்கான கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் காரணமாக, செலவு அதிகரித்துள்ளது.


இதனால், சதுரடிக்கு, 200 ரூபாய் வரை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.செலவு திடீரென உயர்ந்ததால், கட்டுமான நிறுவனங்கள் மட்டுமல்லாது, வீடு வாங்குவோர், தனி வீடு கட்டுவோரும் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். அரசு தலையிட்டு, சிமென்ட் விலையை கட்டுப்படுத்தினால் மட்டுமே, இதில் தீர்வு ஏற்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

மூலக்கதை