இந்திய - சீன ராணுவ அதிகாரிகள் சந்திப்பு: எல்லையில் பதற்றத்தை குறைக்க பேச்சு

தினமலர்  தினமலர்
இந்திய  சீன ராணுவ அதிகாரிகள் சந்திப்பு: எல்லையில் பதற்றத்தை குறைக்க பேச்சு

புதுடில்லி:இந்திய - சீன எல்லையில் நிலவும் பதற்றத்தை குறைக்கும் வகையில், இரு நாட்டு ராணுவ அதிகாரிகளுக்கும் இடையே நேற்று பேச்சு நடந்தது. 'பிரச்னைக்கு சுமுக தீர்வு காணும் வகையில், இரு நாட்டு ராணுவ அதிகாரிகள் மற்றும் துாதரக அதிகாரிகளும் தொடர்ந்து பேச்சு நடத்துவர்' என, வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்திய - சீன எல்லையில், காஷ்மீரின் லடாக் பகுதியில், ஒரு மாதத்துக்கு முன், சீன வீரர்கள் அத்துமீறலில் ஈடுபட்டனர். நம் வீரர்களுடன் கைகலப்பில் ஈடுபட்டனர். சீன விமானப் படை ஹெலிகாப்டர், நம் எல்லைக்கு அருகில் கண்காணிப்பில் ஈடுபட்டது. இதற்கு பதிலடியாக, நம் விமானப் படை ஹெலிகாப்டரும் கண்காணிப்பில் ஈடுபட்டது.

சர்வதேச பிரச்னை



சீன எல்லைக்கு அருகில் இந்திய வீரர்கள் கட்டுமான பணிகளை மேற்கொள்வதாக, சீன ராணுவம் தெரிவித்தது. இதையடுத்து, எல்லையில் இரு நாட்டு வீரர்களும் குவிக்கப்பட்டதால் பதற்றம் நிலவியது. அமெரிக்காவும் இது குறித்து கருத்து தெரிவித்ததால், சர்வதேச பிரச்னையாக மாறியது. இதற்கிடையே, இரு நாட்டு ராணுவ கமாண்டர்கள், 12 சுற்றுக்களாக பேச்சு நடத்தினர். துாதரக அதிகாரிகளும் பேச்சு நடத்தினர். இதற்கு பலன் கிடைத்ததை அடுத்து, சில பகுதிகளில் சீன வீரர்கள் பின்வாங்கிச் சென்றனர்.

இதன் தொடர்ச்சியாக, இரு நாட்டு லெப்டினன்ட் ஜெனரல் அந்தஸ்திலான ராணுவ அதிகாரிகளுக்கு இடையே, நேற்று பேச்சு நடந்தது.இரு நாட்டு எல்லையில், சீன பகுதியில் உள்ள மால்டோ என்ற இடத்தில், இந்த சந்திப்பு நடந்தது. நம் தரப்புக்கு, லெப், ஜெனரல் ஹரீந்தர் சிங் தலைமை வகித்தார்.

வலியுறுத்தல்



சீன தரப்புக்கு, திபெத் மிலிட்டரி லெப், ஜெனரல் தலைமை வகித்தார்.இந்த சந்திப்பின் போது, கல்வான் பள்ளத்தாக்கு, பாங்காங் சோல, கோக்ரா ஆகிய பகுதிகளில், பதற்றம் ஏற்படுவதற்கு முந்தைய நிலையே தொடர வேண்டும் என, நம் தரப்பில் வலியுறுத்தப் பட்டது. மேலும், எல்லையில் குவிக்கப்பட்டுள்ள வீரர்களை வாபஸ் பெறும்படியும், இந்திய பகுதிக்குள் அமைக்கப்படும் கட்டுமான பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டாம் என்றும் கூறப்பட்டது.

ராணுவ அதிகாரிகளுக்கு இடையே நடந்த பேச்சு குறித்து, வெளியுறவு அமைச்சகம் விடுத்துள்ள அறிக்கையில், 'இந்தியா - சீனா இடையேயான எல்லை பிரச்னைக்கு தீர்வு காண, இரு நாட்டு ராணுவ மற்றும் துாதரக அதிகாரிகள் அளவிலான பேச்சு, தொடர்ந்து நடக்கும்' என, தெரிவிக்கப் பட்டு உள்ளது.

'அமெரிக்காவை நம்ப வேண்டாம்'

சீன கம்யூனிச அரசின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான, 'குளோபல் டைம்சில்' எழுதப்பட்டு உள்ள தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது: அண்டை நாடான இந்தியாவுடன் எந்தவிதமான மோதல் போக்கையும் பின்பற்ற சீனா விரும்பவில்லை. அண்டை நாடுகளுடன் நட்பு பாராட்டுவதே சீனாவின் அடிப்படையான தேசிய கொள்கை. எல்லை பிரச்னைக்கு அமைதியான முறையில் தீர்வு காணவே சீனா விரும்புகிறது.

இந்தியாவை எதிரியாக கருதுவதற்கு, எங்களுக்கு எந்த காரணமும் இல்லை. அதேநேரத்தில், எங்களுக்கு சொந்தமான ஒரு அங்குல நிலத்தைக் கூட விட்டுக் கொடுக்க மாட்டோம். சீனாவுக்கு சொந்தமான நிலப் பரப்பை சொந்தம் கொண்டாட நினைத்தால், அதை, சீனா ஒருபோதும் மன்னிக்காது. கடுமையான பதிலடி கொடுக்கப்படும். இதை, இந்தியா நன்றாக தெரிந்து வைத்திருக்கும் என நம்புகிறோம்.

அமெரிக்கா, இந்தியாவை முட்டாளாக்க நினைக்கிறது. அதற்கு, இந்தியா சம்மதித்து விடக் கூடாது.இவ்வாறு, அதில் எழுதப்பட்டுள்ளது.

மூலக்கதை