சூழ்நிலையை பொறுத்து மேலும் தளர்வு: முதல்வர் இ.பி.எஸ் அறிவிப்பு

தினமலர்  தினமலர்
சூழ்நிலையை பொறுத்து மேலும் தளர்வு: முதல்வர் இ.பி.எஸ் அறிவிப்பு

சென்னை:தமிழகத்தில் மாறி வரும் சூழ்நிலையை பொறுத்து, ஊரடங்கு கட்டுப்பாடுகளில், மேலும் பல தளர்வுகளை அறிவிக்க, அரசு திட்டமிட்டுள்ளது. சென்னையில், நேற்று நடந்த தொழில்துறை மாநாட்டில், இத்தகவலை, முதல்வர் இ.பி.எஸ்., தெரிவித்தார்.

இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில், சென்னை, தலைமை செயலகத்தில் நேற்று, 'ஒளிரும் தமிழ்நாடு' என்ற மாநாடு நடந்தது.'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நடத்தப்பட்ட, இம்மாநாட்டை, முதல்வர் இ.பி.எஸ்., துவக்கி வைத்தார்.அப்போது, அவர் பேசியதாவது:

அனுமதி

கொரோனா தொற்று காரணமாக, நம் வாழ்க்கை முறையில், பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளி கடைப்பிடிப்பது, சில துறைகளில் அலுவலகம் செல்லாமல், வீட்டிலிருந்து பணிபுரிவது போன்ற மாற்றங்கள், இயல்பாகி வரும் சூழல் உருவாகி உள்ளது.சென்னை போலீஸ் எல்லை பகுதிகளில், 25 சதவீத பணியாளர்கள்; பிற பகுதிகளில், 100 சதவீத பணியாளர்களுடன், தொழிற்சாலைகள் செயல்பட, அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எவ்வித தொய்வுமின்றி, பாதுகாப்பு வழிமுறைகளை, தொடர்ந்து பின்பற்ற வேண்டும்.

மாறி வரும் சூழ்நிலையை, அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது. சூழ்நிலையை பொறுத்து, மேலும் பல தளர்வுகளை அரசு அறிவிக்கும்.கொரோனா நிவாரண கடன் வழங்கும் நடைமுறைகளை எளிதாக்கி, உடனுக்குடன் தொழில் நிறுவனங்களுக்கு, கடன் தொகை வழங்கும்படி, வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்ட்டுள்ளது.உலகப் பொருளாதார சூழலில், கொரோனா நோய் ஏற்படுத்திய விளைவுகளால், சில நாடுகளில் உள்ள, தொழில் நிறுவனங்கள், இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு, மாற முடிவு செய்துள்ளன.

அந்நிறுவனங்களை, தமிழகத்திற்கு ஈர்க்க தேவையான நடவடிக்கைகள் எடுக்க, தலைமை செயலர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுஉள்ளது.சமீபத்தில், தொழில் துறை சார்பில், 17 தொழில் நிறுவனங்களுடன், 15 ஆயிரத்து, 108 கோடி ரூபாய்க்கு, புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்நிகழ்ச்சி, உலகத்தின் பார்வையை, தமிழகம் பக்கம் திருப்பி உள்ளது.முன்னணி நிறுவனங்களுக்கு, தொழில் துவங்க அழைப்பு விடுத்து, தனிப்பட்ட முறையில், கடிதம் எழுதி உள்ளேன்.

இக்கட்டான சூழ்நிலையில், தொழில் துறையை பொறுத்தவரை, நான்கு செயல்பாடுகளில் கவனம் செலுத்த, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
* தமிழக தொழில் நிறுவனங்கள், மீண்டும் இயல்பு நிலையை, விரைவாக அடைய உதவி புரிய வேண்டும்

* புதிய முதலீடுகளை ஈர்க்க வேண்டும்

* அரசு அனுமதிகள் மற்றும் நடைமுறைகளை, மேலும் எளிதாக்க வேண்டும்

* கடன் வழங்கும் நடைமுறைகளை எளிதாக்கி, தொழில்களுக்கு தேவையான, பணப்புழக்கத்தை அதிகரிக்க வேண்டும்.இந்த நான்கு செயல்பாடுகளில், அதிகாரிகள் முனைப்புடன் ஈடுபட உள்ளனர்.கொரோனா பரவியதன் காரணமாக, வெளி மாநில தொழிலாளர்கள் பலர், தங்களின் சொந்த மாநிலத்திற்கு சென்றுள்ளனர்.

இச்சூழலில், தொழில் உற்பத்தி பாதிக்காமல் இருக்க, தமிழகத்தை சேர்ந்த தொழிலாளர்களை பயன்படுத்தி, இயல்பு நிலையை எய்த, தொழில் துறையினர் முயற்சிக்க வேண்டும்.

சீர்திருத்தங்கள்



இதற்காக, தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம், இந்திய தொழில் கூட்டமைப்பு நிறுவனத்துடன் இணைந்து, தொழிலாளர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படும்.மாவட்ட அளவில் சீர்திருத்தங்களை மேற்கொண்டு, தொழிலாளர் துறை, மருந்தியல் துறை, உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவற்றிடம் இருந்து, தொழில் அனுமதி பெறுவதற்கான வழிமுறைகள் எளிதாக்கப்படும்.பணியாளர்களின் உடல் நலம் மற்றும் பணி பாதுகாப்பை உறுதி செய்து கொள்ள வேண்டும்.தமிழக மக்களுக்கும், தொழில் துறைக்கும், தமிழக அரசு என்றைக்கும் பாதுகாப்பு அரணாக இருக்கும்.இவ்வாறு, முதல்வர் பேசினார்.

மூலக்கதை