இந்தியா, சீனாவில் அதிக பாதிப்பு: டொனால்டு டிரம்ப் திட்டவட்டம்

தினமலர்  தினமலர்
இந்தியா, சீனாவில் அதிக பாதிப்பு: டொனால்டு டிரம்ப் திட்டவட்டம்

வாஷிங்டன்: ''இந்தியாவிலும், சீனாவிலும் அதிகமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டால், அமெரிக்காவை விட, அந்த இரு நாடுகளிலும் தான், கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கும்,'' என, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.


அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியதாவது:அமெரிக்காவில், கொரோனா அறிகுறி ஏற்படத் துவங்கியதுமே, பரிசோதனை நடத்தும் முயற்சிகள் துவங்கப்பட்டன. இதுவரை, அமெரிக்காவில், இரண்டு கோடி பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.இதன் காரணமாக, 19 லட்சம் பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது; ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துஉள்ளனர். மற்ற நாடுகளில், இந்த அளவுக்கு அதிகமான பரிசோதனைகள் நடத்தப்படுவது இல்லை. குறிப்பாக, சீனாவிலும், இந்தியாவிலும் அதிகமான பரிசோதனைகள் நடத்தப்பட்டால், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை, அமெரிக்காவில் உள்ள எண்ணிக்கையை விட நிச்சயம் அதிகமாக இருக்கும்.


இந்தியாவில், 40 லட்சம் பேருக்கு தான் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாக, அந்த நாட்டு சுகாதார அமைச்சகம் அறிவித்து உள்ளது. இதில், 2.36 லட்சம் பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவிலும் இது தான் நிலைமை.அதிக பரிசோதனைகள் நடத்தப்பட்டால், பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கும். எனவே, அதிக பரிசோதனைகள் நடத்தப்படுவதற்காக அமெரிக்க மக்கள் பெருமைப்பட வேண்டும்.பரிசோதனை நடத்தும் சுகாதாரத் துறை அதிகாரிகள், ஊழியர்கள் பாராட்டுக்கு உரியவர்கள். இவ்வாறு, அவர் கூறினார்.

மூலக்கதை