கொரோனா ஆட்டி படைத்தாலும் சென்னையில் 10 ஆயிரம் பேர் குணம்

தினமலர்  தினமலர்
கொரோனா ஆட்டி படைத்தாலும் சென்னையில் 10 ஆயிரம் பேர் குணம்

சென்னை: சென்னையில், கொரோனா தொற்றால் பாதித்த, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளதால், சுகாதார துறையினர் நிம்மதி அடைந்துள்ளனர்.

உலக நாடுகளை உலுக்கி எடுத்த கொரோனா தொற்று, மே துவக்கத்தில், தமிழகத்தில் தன் ஆட்டத்தை துவங்கியது. நேற்றைய நிலவரப்படி(ஜூன் 6), சென்னையில் தொற்று பாதித்தோர் எண்ணிக்கை, 19 ஆயிரத்து, 826. மற்ற மாவட்டங்களை காட்டிலும், சென்னையில், மக்கள் அடர்த்தி, கோயம்பேடு மார்க்கெட் தொற்று, வெளிநாடு மற்றும் பிற மாநில மக்கள் வருகை போன்றவை, தொற்று அதிகரிக்க காரணமானது.

அதிகபட்சமாக, ராயபுரத்தில், 3,552 பேர் உட்பட, மூன்று மண்டலங்களில், இரண்டாயிரத்தையும், மூன்று மண்டலங்களில் ஆயிரத்தையும், தொற்று பாதிப்பு எண்ணிக்கை கடந்து விட்டது. ஓரிரு நாட்களில், வளசரவாக்கம், அம்பத்துார், திருவொற்றியூர் போன்ற மண்டலங்கள், ஆயிரத்தை எட்டும் நிலை உள்ளது. அதே நேரத்தில், குணமடைந்தோர் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருகிறது.


மே, 28ல், சென்னையில் தொற்று பாதித்த, 12 ஆயிரத்து, 203 பேரில், 5,765 பேர் குணமடைந்துள்ளனர். இது, 50 சதவீதத்திற்கும் குறைவாகும். மே, 29ல், 12 ஆயிரத்து, 762 பேரில், 6,330 பேர் குணமடைந்திருந்தனர். தொடர்ந்து, குணமடைந்தோர் எண்ணிக்கை, சென்னையில் ஏறு முகமாக உள்ளது. நேற்று, தொற்று பாதித்த, 19 ஆயிரத்து, 826 பேரில், 10 ஆயிரத்து, 156 பேர் குணமடைந்துள்ளனர். இது, 51.22 சதவீதம்.

இந்த எண்ணிக்கையால், சுகாதார துறையினர் சற்றே நிம்மதி பெருமூச்சு விடுகின்றனர். இப்போது, 9,282 பேர் மட்டுமே, மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். எனினும், 178 பேர், தொற்றால் பலியாகியுள்ளனர்.

மூலக்கதை