அறிவிப்பு! தனியார் ஆஸ்பத்திரிகளுக்கான கட்டணம் ...தினசரி சிகிச்சைக்கு வசூலிக்க அரசு உத்தரவு

தினமலர்  தினமலர்
அறிவிப்பு! தனியார் ஆஸ்பத்திரிகளுக்கான கட்டணம் ...தினசரி சிகிச்சைக்கு வசூலிக்க அரசு உத்தரவு

சென்னை:தனியார் மருத்துவமனைகளில், கொரோனா சிகிச்சைக்கான கட்டண விபரத்தை, அரசுஅறிவித்துள்ளது. அதன்படி, நாள் ஒன்றுக்கு, குறைந்தபட்சம், 5,000 ரூபாய்; அதிகபட்சம், 15 ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ், கொரோனா நோய் தொற்றுக்கு,தனியார் மருத்துவமனைகளில், இலவச சிகிச்சை அளிப்பது குறித்து, இரு தினங்களுக்கு முன், அரசாணை வெளியிடப்பட்டது.

இந்நிலையில், இந்திய மருத்துவ சங்கத்தின், தமிழ்நாடு கிளை நிர்வாகிகள், கொரோனா நோய் தொற்று ஏற்பட்டவர்களுக்கு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை கட்டணம் வசூலிப்பது தொடர்பாக, அரசுக்கு சில கோரிக்கைகளைமுன்வைத்தனர்.

அறிக்கை

இது குறித்து, சுகாதாரத் துறை செயலர் பீலா ராஜேஷ் தலைமையிலான குழு ஆய்வு செய்தது. ஆய்வு முடிவில், தனியார் மருத்துவமனையில், கொரோனா நோயாளிகளிடம் இருந்து பெற, அனுமதிக்கப்பட வேண்டிய, தினசரி கட்டணம் மற்றும் நிபந்தனைகள் குறித்து, அரசுக்கு அறிக்கை அளித்தது.அதை ஏற்று, அரசு கட்டணத்தை நிர்ணயம் செய்துள்ளது.

அதன்படி, 'கிரேடு ஏ 1' மற்றும் 'ஏ 2' என்ற, முதல் நிலை மருத்துவமனைகளில், கொரோனா அறிகுறிகள் இல்லாதவர்கள் மற்றும் லேசான அறிகுறிகளுடன் கூடிய நபர்களுக்கு, பொது வார்டில், தினசரி கட்டணமாக, 7,500 ரூபாய்; தீவிர சிகிச்சை பிரிவில், 15 ஆயிரம் ரூபாய் வசூலிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அதிகபட்ச கட்டணம்

'கிரேடு ஏ 3 மற்றும் ஏ 4' என்ற அடுத்த நிலை மருத்துவமனைகளில், பொது வார்டில், 5,000 ரூபாய்; தீவிர சிகிச்சை பிரிவில், 15 ஆயிரம் ரூபாய், கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.இது, அதிகபட்ச கட்டணம். இதற்கு மேலான தொகையை, நோயாளிகளிடம் இருந்து வசூலிக்கக் கூடாது என, அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த தகவலை, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

செலவை அரசு ஏற்க வேண்டும்!



இந்திய மருத்துவ சங்கத் தின் தமிழக பிரிவு தலைவர் ராஜா கூறியதாவது:தனியார் மருத்துவ மனைகளில், கொரோனா சிகிச்சைக்கு, நாங்கள் பரிந்துரைத்த தொகையை விட, 7,000 ரூபாய் குறைவாக உள்ளது. பேரிடர் காலத்தில், அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல், மக்களுக்கு சேவையாற்ற உள்ளோம்.

நாங்கள், மூலப்பொருட்கள், மருத்துவ உபகரணங்கள், மருந்துகள், பரிசோதனைகள் செய்வதற் கான செலவை குறிப்பிட்டு, கட்டணத்தை நிர்ணயித்து இருந்தோம்.எனவே, எங்களுக்கு கட்டணம் நிர்ணயித்தது போல, மூலப்பொருட்கள், மருத்துவ உபகரணங்களின் விலையையும், அரசு குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், கொரோனா வார்டில் சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள், நர்ஸ்களை, ஒரு வாரம் தனிமைப் படுத்துவதற்கான செலவை, அரசு ஏற்க வேண்டும்.அப்போது தான், அரசு நிர்ணயித்த கட்டணத்தின் அடிப்படையில், தனியார் மருத்துவமனைகளால் நஷ்டமின்றி சிகிச்சை அளிக்க முடியும்.இவ்வாறு, அவர் கூறினார்.

மூலக்கதை