20 லட்சம் டோஸ் தடுப்பு மருந்து தயார்: டிரம்ப் தந்த இன்ப அதிர்ச்சி!

தினமலர்  தினமலர்
20 லட்சம் டோஸ் தடுப்பு மருந்து தயார்: டிரம்ப் தந்த இன்ப அதிர்ச்சி!

கொரோனா வைரஸ் நோய்க்கு எதிரான தடுப்பூசி 20 லட்சம் அளவில் அமெரிக்கா ஏற்கனவே தயாரித்துள்ளது, பாதுகாப்பு பரிசோதனைகளை முடிந்த பின் அவை பயன்பாட்டுக்கு வரும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் இன்ப அதிர்ச்சி தந்துள்ளார்.


அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை 18.7 லட்சம் ஆகும். 7.3 லட்சம் பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். இறந்தவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்து 11 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

இந்த நிலையில் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் டிரம்ப் “தடுப்பூசிகள் குறித்து ஒரு கூட்டம் நடத்தினோம். தடுப்பூசி தயாரிப்பில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. வியக்கத்தக்க வகையில் நாம் சிறப்பாக செயல்படுகிறோம். சொல்லப்போனால் பாதுகாப்பு சோதனைகள் முடிந்த உடன் 20 லட்சம் அளவிற்கான மருந்துகளை விநியோகம் செய்ய தயாராக உள்ளோம். நான்கு நிறுவனங்கள் மருந்து தயாரிப்பில் உள்ளன. அதிகாரிகள் இப்போது நோயை புரிந்துகொண்டனர்” என்றார்.


ஆனால் எந்த நிறுவனம் மருந்து தயாரிப்பை தொடங்கியுள்ளது என்பதை அவர் குறிப்பிட வில்லை. மாடர்னா இன்க்., அஸ்ட்ராஜெனெகா பி.எல்.சி, ஃபைசர், ஜான்சன் & ஜான்சன், மெர்க் & கோ ஆகிய நிறுவனங்கள் மருந்து தயாரிப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. கொரோனா வைரசுக்கு சாத்தியமான தடுப்பூசி கண்டறிவதில் தேசிய சுகாதார நிறுவனங்கள் மாடர்னா மருந்து நிறுவனத்துடன் விரைவான பணிகளில் ஈடுபட்டுள்ளன.

மூலக்கதை