உலகளவில் ஒருநாள் பாதிப்பில் இந்தியா முதலிடம்; 24 மணி நேரத்தில் 294 பேர் பலி: மொத்த பாதிப்பில் இத்தாலியை முந்தி 6வது இடத்தை பிடித்தது

தமிழ் முரசு  தமிழ் முரசு
உலகளவில் ஒருநாள் பாதிப்பில் இந்தியா முதலிடம்; 24 மணி நேரத்தில் 294 பேர் பலி: மொத்த பாதிப்பில் இத்தாலியை முந்தி 6வது இடத்தை பிடித்தது

புதுடெல்லி: கொரோனா பாதிப்பில் இத்தாலியை முந்திக் கொண்டு 6வது இடத்தில் இந்தியா இடம்பெற்றது. நாடு முழுவதும் ஒரே நாளில் 294 பேர் பலியாகி உள்ளனர்.

உலகளவில் இறப்பு எண்ணிக்கை 4 லட்சத்தை நெருங்குகிறது. இந்தியாவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட முதல் 5 மாநிலங்கள் பட்டியலில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி, குஜராத் மற்றும் ராஜஸ்தான் ஆகியன உள்ளன.

இன்று காலை நிலவரப்படி மகாராஷ்டிராவில் மட்டும் 80,229 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 28,694 பேருக்கும், டெல்லியில் 26,334 பேருக்கும், குஜராத்தில் 19,119 பேருக்கும், ராஜஸ்தானில் 10,084 பேருக்கும் நோய்த்தொற்று உறுதியாகி உள்ளது.

தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் கடந்த சில தினங்களாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

அங்கு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,700 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் ஒரே நாளில் 140 பேர் உயிரிழந்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் கொரோனாவால் 2,849 பேர் பலியாகி உள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்கும் வகையில் 9,887-ஐ தாண்டியுள்ளது. அதேபோல் ஒரே நாளில் பலியானோர் எண்ணிக்கை முதன்முறையாக 294 ஆக உயர்ந்துள்ளது.

உலகின் வேறு எந்த நாட்டையும் விட ஒரே நாளில் அதிகளவு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையில் இந்தியா முதலிடம் பெற்றுள்ளது. அமெரிக்காவில் 8,580 பேரும், பிரேசிலில் 6,007 பேரும் பாதித்தனர்.

மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2. 36 லட்சத்தைத் தாண்டியுள்ளது.

இதுவரை 6,649 பேர் இறந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலகளவில் 68,44,705 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இறப்பு எண்ணிக்கை இதுவரை 3,98,000 ஆக உயர்ந்துள்ளது.

உலகளவில் 33,48,831 நோயாளிகள் குணமாகியுள்ளனர். பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை இந்தியா உலகில் 7வது இடத்தில் இருந்து இன்று ஆறாவது இடத்திற்கு வந்தது.

பாதிப்பு பட்டியலின்படி அமெரிக்கா - 19,65,708 (1வது இடம்), பிரேசில் - 6,46,006 (2வது இடம்), ரஷ்யா - 4,49,834 (3வது இடம்), ஸ்பெயின் - 2,88,058 (4வது இடம்), இங்கிலாந்து - 2,83,311 (5வது இடம்), இந்தியா - 2,36,184 (6வது இடம்), இத்தாலி - 2,34,531 (7வது இடம்) என்ற வரிசையில் நாடுகள் உள்ளன. இந்தியாவில் 1,16,302 நோயாளிகள் சிகிச்சையில் உள்ளனர்.

இதுவரை 1,13,233 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமாகி உள்ளனர்.

.

மூலக்கதை