கொரோனா சிகிச்சைக்கு ஆயுஷ்மான் திட்டத்தில் நிர்ணயித்த கட்டணத்தை வசூலிக்க தயாரா?: தனியார் மருத்துவமனைகளிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி

தினகரன்  தினகரன்
கொரோனா சிகிச்சைக்கு ஆயுஷ்மான் திட்டத்தில் நிர்ணயித்த கட்டணத்தை வசூலிக்க தயாரா?: தனியார் மருத்துவமனைகளிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி

புதுடெல்லி: ‘கொரோனா சிகிச்சைக்கு ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் அரசு நி்ர்ணயித்த கட்டணத்தை வசூலிக்க தனியார் மருத்துவமனைகள் தயாரா?’ என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகளில் கட்டணங்களை ஒழுங்குபடுத்த கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பு வக்கீல் சச்சின் ஜெயின் வாதாடுகையில், ‘‘கொரோனா சிகிச்சைக்கு ஆயுஷ்மான் திட்ட பயனாளிகளிடம் ரூ.4000 மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதுவே, மற்றவர்களிடம் பெரும் தொகை வசூலிக்கப்படுகிறது,’’ என்றார்.மத்திய அரசு தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி, ‘‘ஏழ்மை நிலையில் இருப்பவர்களுக்கு மட்டுமே ஆயுஷ்மான் திட்டப் பலன்களை அரசு வழங்க முடியும். அனைத்து சமூகத்தையும் சேர்ப்பது இயலாத காரியம். மேலும், கார்ப்பரேட் மருத்துவமனைகளை அரசு ஆதரிக்கிறது என்பதில் உண்மையில்லை. ’’ என்றார்.மருத்துவமனைகள் சங்கம் சார்பில் மூத்த வக்கீல் முகுல் ரோத்தகி ஆஜராகி, ‘‘கொரோனாவால் ஏற்கனவே மருத்துவமனைகளின் வருவாய் 60-70 சதவீதம் சரிந்து விட்டது,’’ என்றார். இதைக் கேட்ட தலைமை நீதிபதி பாப்டே, ‘‘அரசிடம் நிலத்தை பெற்று மருத்துவமனை நடத்தும் மருத்துவமனைகளாவது கொரோனா நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை அளிக்கலாமே? ஆயுஷ்மான் திட்டத்தில் அரசு நிர்ணயித்த கட்டணத்திலேயே அனைத்து கொரோனா நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்க தனியார் மருத்துவமனைகள் தயாரா? ஆயுஷ்மான் திட்ட பலன்களை நீட்டிப்பது குறித்து 2 வாரங்களில் பதிலளிக்க வேண்டும்,’’ என உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.புதிய வழக்கு கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் நிர்ணயிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மற்றொரு மனு, நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. இதில் ஒரு வாரத்தில் மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

மூலக்கதை