பிரிவுபசார விழாவில் ஊரடங்கு விதிகளை மீறி போலீஸ் கொண்டாட்டம்: உ.பி. இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்

தினகரன்  தினகரன்
பிரிவுபசார விழாவில் ஊரடங்கு விதிகளை மீறி போலீஸ் கொண்டாட்டம்: உ.பி. இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்

லக்னோ: உத்தர பிரதேசத்தில் கொரோனா ஊரடங்கை மீறி மாஸ்க் அணியாமல், சமூக இடைவெளி கடைபிடிக்காமல், வாகன அணிவகுப்பு நடத்தி தடபுடலாக பிரிவுபசாரம் அளிக்கப்பட்ட இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். உத்தர பிரதேச மாநிலம், பாஸ்கரி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மனோஜ் குமார் சிங், சமீபத்தில் ஜெய்த்பூர் காவல் நிலையத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதற்காக அவருக்கு பிரியாவிடை அளிக்க, காவல் நிலைய சக போலீசார் முடிவு செய்தனர். இதன்படி, வாகன அணிவகுப்பு பேரணி, இனிப்பு வழங்குதல் என தடபுடல் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. போலீசாரும் அவர்களின் குடும்பத்தாரும் என பிரிவுபசார கொண்டாட்டத்தில் பெரிய கும்பலே பங்கேற்றது. இதில் யாருமே மாஸ்க் அணியாமல், சமூக இடைவெளியையும் காற்றில் பறக்கவிட்டனர். பூ அலங்காரம் செய்யப்பட்ட ஜீப்பில் இன்ஸ்பெக்டர் அமர அவருக்கு பின்னால் அலங்கரிக்கப்பட்ட ஜீப், கார், பைக் என ஏராளமான வாகனங்களில் அணிவகுப்பு அமர்க்களப்பட்டது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவவே, மாவட்ட எஸ்பி அலோக் பிரியதர்ஷினி கடும் நடவடிக்கை எடுத்துள்ளார். கொரோனா ஊரடங்கை மீறிய குற்றத்திற்காக சம்மந்தப்பட்ட இன்ஸ்பெக்டர் மனோஜ் சஸ்பெண்ட் செய்யப்பட்டு, அவர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. மற்ற போலீசார் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுப்பதற்கான விசாரணைகள் நடந்து வருகின்றன.

மூலக்கதை