2022 மகளிர் ஆசிய கோப்பை இந்தியாவில் நடத்த அனுமதி

தினகரன்  தினகரன்
2022 மகளிர் ஆசிய கோப்பை இந்தியாவில் நடத்த அனுமதி

புதுடெல்லி: ஏஎப்சி மகளிர் ஆசிய கோப்பை கால்பந்து போட்டித் தொடர், 1979ம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக இந்தியாவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆசிய கால்பந்து கூட்டமைப்பின் பொதுச் செயலர் தத்தோ விண்ட்சர் ஜான் இதுகுறித்து இந்திய கால்பந்து கூட்டமைப்புக்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘2022ம் ஆண்டு ஏஎப்சி ஆடிய கோப்பை கால்பந்து பைனல்ஸ் தொடரை இந்தியாவில் நடத்துவதற்கான ஒப்புதலை வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம். இந்த தொடர் ஆண்டில் இரண்டாவது பாதியில் நடைபெறும்’ என்று தெரிவித்துள்ளார். இதுவரை 8 அணிகள் பங்கேற்று வந்த நிலையில், 2022ம் ஆண்டுக்கான தொடரில் 12 அணிகள் களமிறங்க உள்ளன. போட்டியை நடத்தும் நாடு என்ற வகையில் இந்திய அணி நேரடியாக பங்கேற்பது உறுதியாகி உள்ளது. 2023 பிபா மகளிர் உலக கோப்பை கால்பந்து போட்டித் தொடருக்கான கடைசி தகுதிச்சுற்று போட்டியாகவும் இது அமையும். 2021ல் பிபா யு-17 மகளிர் உலக கோப்பை கால்பந்து தொடர் இந்தியாவில் நடைபெற உள்ள நிலையில், தற்போது ஏஎப்சி ஆசிய கோப்பை தொடரும் நடக்க உள்ளது இந்தியாவில் மகளிர் கால்பந்து விளையாட்டு பிரபலமாக உதவும். கடைசியாக 1979ல் இந்தியாவில் நடந்த ஆசிய கோப்பை தொடரில் இந்திய மகளிர் அணி 2வது இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை