லடாக் எல்லை பிரச்னையை பேச்சு மூலம் தீர்க்க இந்தியா - சீனா முடிவு; இரு நாட்டு ராணுவ உயரதிகாரிகள் இன்று பேச்சுவார்த்தை...!

தினகரன்  தினகரன்
லடாக் எல்லை பிரச்னையை பேச்சு மூலம் தீர்க்க இந்தியா  சீனா முடிவு; இரு நாட்டு ராணுவ உயரதிகாரிகள் இன்று பேச்சுவார்த்தை...!

பீஜிங்; லடாக் எல்லையில் இந்திய - சீன ராணுவங்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள மோதலை தீர்க்க இன்று பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. இந்தியாவின் லடாக் எல்லையை ஒட்டிய பான்காங் சோ, கல்வான், டெம்சோக் பகுதிகளில் சீன ராணுவம் அத்துமீறி நுழைந்து, இந்திய கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டதாக இந்திய ராணுவம் குற்றம் சாட்டியது. இதனைத் தொடர்ந்து இந்தியாவும் அதன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ராணுவத்தை குவித்து வருகிறது. இதனால், கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக எல்லையில் பதற்றமான சூழல் நிலவுகிறது. இப்பிரச்னைக்கு தீர்வு காண்பது தொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் (கிழக்கு ஆசியா பிரிவு) நவீன் ஸ்ரீவத்சவாவும், சீன வெளியுறவு அமைச்சகத்தின் இயக்குனர் ஜெனரல் வு ஜியாங்கோவும் வீடியோ கான்பரன்சிங் மூலம் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர்.இதில், எல்லைப் பிரச்னையை பற்றி நேரடியாக குறிப்பிடாத இருதரப்பும், பேச்சுவார்த்தை மூலம் சுமூகமாக தீர்த்துக் கொள்ளலாம் என முடிவு செய்தன. இதற்கிடையே, இருநாட்டு ராணுவ உயரதிகாரிகளும் இன்று பேச்சுவார்த்தை நடத்த உள்ளர். இதில், இந்தியாவின் சார்பில் லடாக் யூனியன் பிரதேசத்தில் உள்ள லே பகுதியின் 14வது படையின் கமாண்டர் லெப்டினன்ட் ஜெனரல் ஹரிந்தர் சிங் பங்கேற்கிறார். இதற்கிடையே, சீன ராணுவத்தில் தெற்கு படையின் தளபதியாக பணியாற்றி வந்த ஜூ குய்லிங்கை இந்தோ-சீனா எல்லை பகுதியை கண்காணிக்கும் மேற்கு படையின் தளபதியாக சீனா நேற்று திடீரென நியமித்தது, இருநாடுகளுக்கும் இடையே இன்று பேச்சுவார்த்தை நடக்க இருக்கும் நிலையில், சீன ராணுவம் இந்த மாற்றத்தை செய்துள்ளது.

மூலக்கதை