70 ஆண்டுகள் பாரம்பரியமிக்க அட்லஸ் சைக்கிள் நிறுவனத்தின் கடைசி தொழிற்சாலையும் மூடல்: உபரி நிலங்களை விற்று ரூ.50 கோடி நிதி திரட்ட முடிவு

தினகரன்  தினகரன்
70 ஆண்டுகள் பாரம்பரியமிக்க அட்லஸ் சைக்கிள் நிறுவனத்தின் கடைசி தொழிற்சாலையும் மூடல்: உபரி நிலங்களை விற்று ரூ.50 கோடி நிதி திரட்ட முடிவு

புதுடெல்லி: இந்தியாவை சைக்கிள் பிராண்டுகளில் அட்லஸ் முதலிடத்தில் இருக்கிறது. 1951ம் ஆண்டு சோனிபட்டில் தொடங்கப்பட்ட அட்லஸ் நிறுவனம், 70 ஆண்டுகள் பாரம்பரியமிக்கது. பூமி உருண்டையை தூக்கி சுமக்கும் அட்லஸ் பொறித்த லோகோ, உறுதியான தயாரிப்பு, 1982ம் ஆண்டு ஆசிய விளையாட்டு போட்டிகளில் அதிகாரப்பூர்வ சைக்கிள் வினியோகம் என்று அந்தளவுக்கு பிரபலமானது அட்லஸ் சைக்கிள். கடந்த 2014ல் ஏற்பட்ட நிதி நெருக்கடி காரணமாக மலன்பூரில் உள்ள உற்பத்தி தொழிற்சாலை மூடப்பட்டது. அதையடுத்து, ஒன்றரை வருடங்களில் அரியானா மாநிலம் சோனிபட்டில் உள்ள உற்பத்தி தொழிற்சாலை 2018ல் மூடப்பட்டது. இந்நிலையில், இறுதியாக செயல்பட்டு வந்த ஷாகிபாபாத் உற்பத்தி தொழிற்சாலையையும் அட்லஸ் நிறுவனம் கடந்த 3ம் தேதி மூடியதாக தெரிவித்துள்ளது. மூடப்பட்டவைகளில் சோனிபட் தொழிற்சாலையை மட்டும் திறக்க, இதன் நிர்வாகம் முயற்சி மேற்கொண்டுள்ளது.  இது குறித்து அதன் தலைமை அதிகாரி சிங் ரானா கூறுகையில், ``போதிய நிதி இல்லாததால், சோனிபட் தொழிற்சாலையின் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. அதனை மீண்டும் செயல்படுத்த ரூ 50 கோடி தேவைப்படுகிறது. உபரி நிலங்களை விற்பதன் மூலம் திரட்டப்படும் நிதியில் கடனை அடைத்து விட்டு மீண்டும் உற்பத்தி தொடங்கப்பட உள்ளது. \' என தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், ``மாதம் ஒன்றுக்கு 40 லட்சம் சைக்கிள் உற்பத்தி செய்து வந்த நிலையில், அது 1.5 முதல் 2 லட்சமாக சரிந்து விட்டது. உற்பத்தி பொருட்களின் விலையேற்றமும் இதற்கு காரணமாகும். கடந்த 2017ல் 800 ஆக இருந்த தொழிலாளர்கள் எண்ணிக்கை 431 ஆக குறைக்கப்பட்டது. தற்போது நிறுவனத்தை செயல்படுத்து  அவர்களுக்கு ஆட்குறைப்பு அடிப்படையில் 50 சதவீத ஊதியம் வழங்கப்படும். அவர்கள் நிறுவனத்தின் பணியாளர்களாக தொடருவார்கள்,\'\' என்று கூறினார்.

மூலக்கதை