பம்பர் பரிசு! துண்டுச்சீட்டு விற்பனையில் கிடைக்குமாம்; இப்படியும் சூதாட்டம்

தினமலர்  தினமலர்
பம்பர் பரிசு! துண்டுச்சீட்டு விற்பனையில் கிடைக்குமாம்; இப்படியும் சூதாட்டம்

கொட்டாம்பட்டி:மதுரை மாவட்டத்தில் துண்டு சீட்டு லாட்டரி விற்பனையில் ரூ.4.50 லட்சம் பம்பர் பரிசு கிடைக்கும் என நம்பி பணத்தை செலவழிப்பவர்களால் அவர்களது குடும்பங்கள் பரிதவிப்பிற்கு ஆளாகியுள்ளன.

கொட்டாம்பட்டியில் ரூ.30, ரூ.60, ரூ.100 என சிலர் பணம் பெற்றுக்கொண்டு துண்டு சீட்டில் சில எண்களை குறித்து கொடுக்கின்றனர். அந்த எண்களை அலைபேசியில் படம் பிடித்து கேரளா லாட்டரி நிறுவனம் ஒன்றுக்கு வாட்ஸ் ஆப்பில் அனுப்புகின்றனர். தினமும் பகல் 3:00 மணிக்கு அலைபேசியில் குறிப்பிட்ட எண்களுக்கு பரிசு விழுந்திருப்பதாக தகவல் அனுப்பப்படுகிறது.

இதில் ரூ.100 கொடுத்து வாங்கிய சீட்டில் கடைசி ஒரு எண் தேர்வானால் ரூ.100 பரிசு தருகிறார்கள். அந்த சீட்டில் இரண்டு எண்கள் தேர்வாகி இருந்தால் ரூ.1000, மூன்று எண்களுக்கு ரூ. 23 ஆயிரம், நான்கு எண்களுக்கு ரூ.4.50 லட்சம் பம்பர் பரிசு கொடுப்பதாக தெரிவித்து துண்டு சீட்டை 'லாட்டரி' என்ற பெயரில் விற்கின்றனர். இதுவரை பெரிய அளவில் யாருக்கும் பரிசு விழவில்லை. சிலருக்கு ரூ.100 பரிசு விழுந்துள்ளது.

அதிலும் கமிஷன் எடுத்துக்கொள்கிறார்கள். பம்பர் பரிசு விழும் என்ற நம்பிக்கையில் சிலர் வட்டிக்கு கடன் வாங்கி லாட்டரி சீட்டு வாங்குவதால் அவர்கள் குடும்பங்கள் பரிதவிப்பிற்கு ஆளாகியுள்ளன. இதேபோல் மதுரை மாவட்டத்தின் பல பகுதிகளிலும் மறைமுகமாக இந்த லாட்டரி சூதாட்டம் நடக்கிறது. இதற்கு போலீசார் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

மூலக்கதை