காஷ்மீரில் பாக். படையினர் அத்துமீறி தாக்குதல்: இடைப்பாடிச்சேர்ந்த ராணுவ வீரர் வீர மரணம்: சொந்த கிராமத்தினர் சோகம்

தினகரன்  தினகரன்
காஷ்மீரில் பாக். படையினர் அத்துமீறி தாக்குதல்: இடைப்பாடிச்சேர்ந்த ராணுவ வீரர் வீர மரணம்: சொந்த கிராமத்தினர் சோகம்

இடைப்பாடி: ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணவத்தினர் அத்துமீறி நடத்திய தாக்குதலில், இடைப்பாடியை சேர்ந்த ராணுவ வீரர் வீர மரணமடைந்தார். அவரது உடல் இன்று மாலை சொந்த ஊருக்கு கொண்டு வரப்படவுள்ளது. சேலம் மாவட்டம், இடைப்பாடி அருகே சித்தூர் ஊராட்சி வெத்தலைகாரன்காடு பகுதியை சேர்ந்த பெத்தக்கவுண்டர் மகன் மதியழகன்(40). இவர் கடந்த 21 ஆண்டுகளாக இந்திய ராணுவத்தில் ஹவில்தாராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் ஜம்மு காஷ்மீரில் எல்லைப்பகுதியில் பணியில் இருந்தபோது, பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தியது. இதில் மதியழகன் வீரமரணமடைந்தார். அவருக்கு தமிழரசி(33) என்ற மனைவியும், 12 வயதில் மகனும், 8 வயதில் மகளும் உள்ளனர். அவர் இறந்த செய்தி கேட்டு அவரது குடும்பத்தார் மற்றும் வெத்தலைகாரன்காடு கிராம மக்கள் கதறி அழுதனர். வீரமரணமடைந்த மதியழகனின் உடல் இன்று மாலை சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட உள்ளது. இதனால், அவரது சொந்த கிராமம் சோகத்தில் மூழ்கியுள்ளது. 20 லட்சம் நிதி: இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கை: தன்னலம் கருதாமல் தியாக உணர்வோடு பாதுகாப்பு பணியில் தம்மை அர்ப்பணித்துக் கொண்டு, வீர மரணம் அடைந்த ஹவில்தார் மதியழகன் குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.மதியழகன் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் உடனடியாக வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

மூலக்கதை