புதுச்சேரியில் கொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை ஆம்புலன்சில் இருந்து இறக்கிய ஊழியர்கள் சவக்குழிக்குள் அலட்சியமாக வீசிய அவலம்!

தினகரன்  தினகரன்
புதுச்சேரியில் கொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை ஆம்புலன்சில் இருந்து இறக்கிய ஊழியர்கள் சவக்குழிக்குள் அலட்சியமாக வீசிய அவலம்!

புதுச்சேரி: புதுச்சேரியில் மாரடைப்பால் உயிரிழந்தவருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து, அவரது உடல் சவக்குழியில் வீசப்பட்டுள்ளது. சென்னை ஆயிரவிளக்கு பகுதியை சேர்ந்தவர் ஜோதிமுத்து, வயது ( 45), இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி கொரோனா ஊரடங்கு உத்தரவிற்கு முன்பே தனது மகளுடன் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு வந்ததாக கூறப்படுகிறது. அடுத்த சில தினங்களில் கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. தொடர்ந்து அவர்கள் தன்னை தானே தனிமைபடுத்தி கொண்டனர். இந்த நிலையில், ஊரடங்கு உத்தரவு தளர்வு அளிக்கப்பட்டதால் சென்னையில் இருந்த ஜோதிமுத்து மனைவி மற்றும் மகளை சந்திப்பதற்காக நேற்று முன்தினம் தனியார் டாக்சி மூலமாக புதுச்சேரி மாநிலத்திற்கு சென்றுள்ளார். அச்சமயம் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனே அவரை மீட்ட உறவினர்கள் புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஜோதிமுத்து வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனை அடுத்து, ஜோதிமுத்து உடல் பிரேத பரிசோதனைக்காக கதுகாம்பம் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அங்கு பிரேத பரிசோதனைக்கு முன்பாக கொரோனா தொற்று உள்ளதா? என சோதனை செய்ததில் ஜோதிமுத்துக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. பின்னர் அவர் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அரசுக்கு சொந்தமான ஆம்புலன்ஸ் மூலமாக வில்லியனுர் பகுதிக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அவருடைய குடும்பத்தினர் யாரும் அப்பகுதிக்கு வரவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து அவர் உடலை புதைப்பதற்காக சுமார் 15 அடி ஆழ குழிதோண்டினர். பின்னர் ஆம்புலன்சில் இருந்து உடலை இறக்கிய ஊழியர்கள் முறையான அடக்கமின்றி ஜோதிமுத்துவை சவக்குழிக்குள் தூக்கி வீசினர். இக்காட்சியானது தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி புதுச்சேரி மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த உடலை நான்கு ஊழியர்கள் தூக்கி வீசிவிட்டு சென்ற பின்னர் ஜே.சி.பி. இயந்திரம் கொண்டு மணல் நிரப்பி அடக்கம் செய்தனர். இறுதி சடங்கில் ஜோதிமுத்துவின் உறவினர்கள் பங்கேற்கவில்லை. அரசு ஊழியர்களே இத்தகைய செயலில் ஈடுபட்டுள்ள சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மூலக்கதை