பிரேசிலில் ஒரே நாளில் 1,473 பேர் பலி

தினமலர்  தினமலர்
பிரேசிலில் ஒரே நாளில் 1,473 பேர் பலி

பிரேசிலில் ஒரே நாளில் 1,473 பேர் பலி

ரியோ டி ஜெனீரோ: தென் அமெரிக்க நாடான பிரேசிலில், கொரோனாவுக்கு ஒரே நாளில், 1,473 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து, பலி எண்ணிக்கை, 34 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்நாடு விரைவில், கொரோனா பலியில், இத்தாலியை விஞ்சும் என, எதிர்பார்க்கப்படுகிறது. பரிசோதனை வசதி குறைபாடுகளால், பலி உயர்ந்து வருவதாக கூறப்படுகிறது.

கொரோனா இல்லாத பிஜி

வெலிங்டன்: தெற்கு பசிபிக் கடல் பகுதியில் உள்ள, பிஜி தீவு, கொரோனா வைரஸ் அறவே இல்லாத நாடாக மாறியுள்ளது.ஒன்பது லட்சம் பேர் வசிக்கும் இந்நாட்டில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட, 18 பேரும் குணமடைந்து வீடு திரும்பி விட்டனர். அத்துடன், கடந்த, 45 நாட்களில் ஒருவர் கூட கொரோனாவால் பாதிக்கப்படவில்லை என பிஜி பிரதமர், பிராங்க் பெய்னிமரமா தெரிவித்துள்ளார்.

வூஹானில் கடைசி மூவரும் குணமடைந்தனர்

பீஜிங்: சீனாவில், கொரோனா தோன்றிய, வூஹான் நகரில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த கடைசி மூன்று பேரும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்நகரில், மீண்டும் கொரோனா பாதிப்பு தோன்றியதை அடுத்து, அங்கு வசிக்கும், ஒரு கோடி பேருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. சீனாவில், கொரோனாவால், 83 ஆயிரத்து, 027 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், 78 ஆயிரத்து, 327 பேர் குணமடைந்துள்ளனர்; 4,634 பேர் பலியாகியுள்ளனர்.

40 சுற்றுலா பயணியருக்கு இலவச உணவு

கொழும்பு: இலங்கையில், கொழும்பு அருகே உள்ள இலா என்ற சுற்றுலா தலத்திற்கு, கடந்த மார்ச்சில் வந்த, வெளிநாட்டு சுற்றுலா பயணியர், 40 பேர் ஊரடங்கு உத்தரவால், வெளியேற முடியாமல் சிக்கியுள்ளனர். அவர்களுக்கு, அங்குள்ள, 'சில் கேப்' உணவக உரிமையாளர், தர்ஷனா ரத்நாயகே, இலவசமாக உணவு வழங்கி வருகிறார். அத்துடன், வாடகையின்றி, தங்குவதற்கும் ஏற்பாடு செய்துள்ளார். அவரின் மனிதநேயம் அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.

ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறு பேர் மரணம்

சான் அன்டோனியோ: அமெரிக்காவில், டெக்சாஸ் மாகாணம், சான் அன்டோனியா நகரில் உள்ள ஒரு வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த காரில், கணவன், மனைவி மற்றும் நான்கு வயதுக்கு உட்பட்ட, நான்கு குழந்தைகள் மர்மமான முறையில் இறந்துள்ளனர். அத்துடன், காரின் முன் பகுதியில், இரண்டு பூனைகளும் இறந்துள்ளன. இது விபத்தல்ல என, தெரிவித்துள்ள போலீசார், வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.

குழந்தையை அழைத்து வர கோரிக்கை

வாஷிங்டன்: அமெரிக்காவில், 'எச்-1பி விசா' காலாவதி காரணமாக, இந்தியா திரும்ப விரும்பும் பலர், தங்களுடன் அமெரிக்க பிரஜையாக உள்ள குழந்தைகளை அழைத்து வர முடியாத சிக்கலில் உள்ளனர். இத்தகைய பிரச்னையை சந்தித்துள்ள, அங்குராஜ் கைலாசம் என்ற பெண், தன் குழந்தைக்கு, இந்திய துாதரகம் மூலம் அவசர விசா பெற்றுள்ளார். ஆனாலும், இந்தியா, அனைத்து வகை விசாவுக்கும் தடை விதித்துள்ளதால், 'வந்தே பாரத்' திட்டத்தின் கீழ் வர முடியாத சூழலில் உள்ளார். இதை குறிப்பிட்டு, விசா விதிமுறையை தளர்த்துமாறு, மத்திய அரசிடம் விண்ணப்பித்துள்ளார்.

மூலக்கதை