கண்காணிப்பு! சென்னையில் மாஞ்சா காற்றாடி விடுவோர் ...சட்டப்படி தொடரும் நடவடிக்கை

தினமலர்  தினமலர்
கண்காணிப்பு! சென்னையில் மாஞ்சா காற்றாடி விடுவோர் ...சட்டப்படி தொடரும் நடவடிக்கை

சென்னை : 'மாஞ்சா நுால் காற்றாடி பறக்க விடுவது தண்டனைக்குறிய குற்றம். மாஞ்சா நுால் தயாரிப்போர், விற்போர் மற்றும் பதுக்கல்காரர்கள் மீது, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்' என, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர், விஸ்வநாதன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதையடுத்து, சென்னை நகர் முழுதும், மாஞ்சா நுால் காற்றாடி விடுவோர் மற்றும் தயாரித்து, விற்போரை, போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். முதற்கட்டமாக, கீழ்ப்பாக்கம் காவல் மாவட்டத்தில், உயரமான கட்டடங்களில் இருந்து, தொலை நோக்கி வாயிலாக கண்காணித்து, மாஞ்சா நுால் காற்றாடி பறக்க விடுவோரை கைது செய்யும் திட்டம் துவக்கப்பட்டுள்ளது.இப்பணிகள், கீழ்ப்பாக்கம் துணை கமிஷனர், மனோகரன் தலைமையில் நடந்து வருகிறது. இங்கு, அனைத்து காவல் நிலைய எல்லைகளிலும், குடிசை பகுதிகள் உள்ளிட்ட இடங்களில், மாஞ்சா நுால் காற்றாடி விடுவதால் ஏற்படும் உயிரிழப்பு மற்றும் தண்டனைகள் குறித்து, 15 இடங்களில், விழிப்புணர்வு, எச்சரிக்கை பலகை வைக்கும் பணி நடக்கிறது.

பெரியமேடு இன்ஸ்பெக்டர் பிரபு மேற்பார்வையில், சென்ட்ரல் ரயில் நிலைய, எட்டாவது மாடி கட்டடத்தில் இருந்து, போலீசார், இரண்டு, 'ஷிப்ட்' முறையில், தொலை நோக்கி வாயிலாக, மாஞ்சா நுால் காற்றாடி விடுவோரை கண்காணிக்கின்றனர். அப்பகுதியில் நேற்று, மாஞ்சா நுால் காற்றாடி விட்டது தொடர்பாக, சிறுவர் ஒருவரை பிடித்து விசாரித்தனர். அவரின் பெற்றோரை காவல் நிலையத்திற்கு வரவழைத்து, எச்சரிக்கை செய்து அனுப்பினர்.

மூலக்கதை