எச்சரிக்கை! புதுச்சேரியில் 3 இலக்கத்தை தொட்டது . ...'கொரோனா' பாதிப்பு குறித்து சுகாதாரதுறை

தினமலர்  தினமலர்
எச்சரிக்கை! புதுச்சேரியில் 3 இலக்கத்தை தொட்டது . ...கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரதுறை

புதுச்சேரியில் ஆரம்பத்தில் ஒற்றை இலக்கத்திலேயே கொரோனா தொற்று இருந்தது. கட்டுக்குள் இருந்த கொரோனா, கடந்த மாதம் இரட்டை இலக்கத்தை எட்டியது. தற்போது, 104 என்ற 3 இலக்கத்துடன் புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை பொறுத்தவரை காரைக்கால், மாகி ஆகிய பகுதிகளில் புதிதாக பாதிப்பு எதுவும் இல்லை; ஏற்கனவே சிகிச்சை பெற்றவர்களும் குணமடைந்து வீடு திரும்பி விட்டனர். தொற்று எதுவும் இல்லாமல் பச்சை மண்டலமாக ஏனாம் தொடர்கிறது.யூனியன் பிரதேசத்தின் தலைநகரான புதுச்சேரி பகுதியில் மட்டும் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் வரை, 63 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இவர்களில் 6 பேர் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதால், சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 57ஆக குறைந்தது.இருந்தபோதும், புதிதாக 5 பேருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்களில் 2 பேர் கொரவள்ளிமேட்டை சேர்ந்தவர்கள். ஏற்கனவே கொரோனாவால் பலர் பாதிக்கப்பட்டுள்ள தனியார் செக்கியூரிட்டி நிறுவனத்துடன் தொடர்பில் இருந்த இவர்களுக்கும் தொற்று பரவி உள்ளது.சோலை நகரில் அடுத்தடுத்து சில குடும்பங்களை சேர்ந்த பலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 14 வயது சிறுவனுக்கு தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது.பிள்ளையார்குப்பத்தில் 24 வயது இளைஞர் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்ததால், அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்தார்.

அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. சந்தேகத்தின் அடிப்படையில் பரிசோதனை மேற்கொண்டதில் கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது. அவர், கோவிட் மருத்துவ மனைக்கு மாற்றப்பட்டுள்ளார். இவருக்கு தொற்று ஏற்பட்டது எப்படி என்பது குறித்து விசாரிக்கப் பட்டு வருகிறது.கோரிமேடு போலீஸ் குடியிருப்பில் வசிக்கும் 33 வயது பெண் ஒருவரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இவரது தந்தை டயாலிசிஸ் நோயாளி. அவரிடம் இருந்து தொற்று பரவியதா அல்லது வேறு யாரிடம் இருந்து பரவியதா என்பது குறித்து விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.புதிதாக பாதிக்கப்பட்டுள்ள 5 பேரையும் சேர்த்தால், மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 62 ஆக உயர்ந்துள்ளது.

இவர்களில் 35 பேர் கோவிட் மருத்துவமனையிலும், 25 பேர் ஜிப்மர் மருத்துவமனையிலும் உள்ளனர். புதுச்சேரியை சேர்ந்த 2 பேர் சென்னை, சேலத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆறு பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதை தொடர்ந்து, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது.மொத்தமாக, புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு பட்டியல் 104 ஆக உயர்ந்துள்ளது. புதுச்சேரியில் பாதிப்பு 3 இலக்கத்தை தொட்டுள்ளதால் சுகாதாரத் துறை அதிகாரிகள் கவலை அடைந்துள்ளனர்.தேவையில்லாமல் வீட்டில் இருந்து வெளியே வர வேண்டாம் என்று பொதுமக்களை எச்சரித்துள்ளனர். சுயக் கட்டுப்பாட்டுடன் இருப்பதுடன், சுகாதாரமான பழக்க வழக்கங்களை பின்பற்றுமாறும் அறிவுறுத்தி உள்ளனர்.

பொது மருத்துவமனையில்துாய்மை பணி தீவிரம்நீரிழிவு நோய்க்காக அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளைஞருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. சென்னையை சேர்ந்த ஒருவர் நெஞ்சு வலி என அரசு பொது மருத்துவ மனைக்கு அழைத்து வரப்பட்டார். டாக்டர்கள் பரிசோதித்தபோது, வரும் வழியிலேயே அவர் இறந்தது தெரியவந்தது. அவரது உடலில் இருந்து மாதிரி எடுத்து பரிசோதித்தபோது, கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது.இந்த இரண்டு சம்பவங்களை தொடர்ந்து, கிருமி நாசினி மூலமாக அரசு மருத்துவமனை சுத்தம் செய்யப்பட்டது. சம்பந்தப்பட்ட டாக்டர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மூலக்கதை