வெளிநாட்டில் வசிப்பவர்களை மீட்பதில் மத்திய அரசுடன் மோதும் கேரளா

தினமலர்  தினமலர்
வெளிநாட்டில் வசிப்பவர்களை மீட்பதில் மத்திய அரசுடன் மோதும் கேரளா

திருவனந்தபுரம்: மேற்காசிய நாடுகளில் பணியாற்றுபவர்களை, சொந்த ஊர் அழைத்து வரும் விவகாரத்தில், கேரள அரசுக்கும், மத்திய அரசுக்கும் இடையே, கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது.


கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. புள்ளி விபரம்இந்த மாநிலத்தைச் சேர்ந்த, 18 லட்சத்திற்கும் மேற்பட்டோர், மேற்காசிய நாடுகளில் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த மூன்று மாதங்களில், கேரளாவைச் சேர்ந்த, 210 பேர், இந்நாடுகளில் கொரோனாவுக்கு பலியாகினர்.கேரளாவில், கொரோனா பாதிப்புகளை கட்டுக்குள் வைக்கும் நோக்கத்தில், வெளிநாடுகளில் வசிக்கும் கேரள மக்களை, அம்மாநில அரசு கைவிட்டுவிட்டதாக, எதிர்க்கட்சியினர் குற்றஞ்சாட்டினர். இதற்கு, 'வெளிநாட்டில் வசிப்பவர்களை அழைத்து வர, நாள் ஒன்றுக்கு, 12 விமானங்களை கேரள அரசு கேட்டது. 'அவ்வளவு விமானங்களை ஏற்பாடு செய்ய முடியாது என மத்திய அரசு மறுத்துவிட்டது' என, கேரள முதல்வர் பினராயி விஜயன் பதில் அளித்திருந்தார்.

ஆனால், 'மத்திய அரசு, நாளொன்றுக்கு, 34 விமானங்களை இயக்க தயாராக இருந்த நிலையில், 12 விமானங்கள் போதும் என, கேரள அரசு தான் வலியுறுத்தியது' என, பா.ஜ.,வைச் சேர்ந்த, வெளியுறவுத் துறை இணை அமைச்சர் முரளீதரன் பதிலளித்தார்.கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, முதல் கட்ட ஊரடங்கு அறிவிக்கப்பட்டபோது, வெளிநாட்டில் வசிக்கும், சொந்த மாநில மக்களை அழைத்து வருவதற்காக, பிரத்யேக இணையதளத்தை கேரள அரசு உருவாக்கியது. அதில், நான்கு லட்சத்திற்கும் மேற்பட்டோர், நாடு திரும்ப விருப்பம் தெரிவித்து பதிவு செய்தனர். ஆனால், 40 ஆயிரம் பேர் மட்டுமே, இதுவரை நாடு திரும்பி உள்ளதாக, புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.


80 சதவீதம் பேர்


கேரளாவில், 1,588 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை, 15 பேர் பலியாகி உள்ளனர். நேற்று முன்தினம், ஒரே நாளில் மட்டும், புதிதாக, 94 பேருக்கு தொற்று உறுதியானது; மூவர் பலியாகினர்.'புதிதாக கண்டறியப்பட்ட தொற்றில், 80 சதவீதம் பேர், வெளிநாட்டில் இருந்து திரும்பியவர்கள்' என, முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.

மூலக்கதை