'இது ரொம்ப புதுசுங்க!' முக கவசம் தயாரிக்க பிரத்யேக இழை

தினமலர்  தினமலர்
இது ரொம்ப புதுசுங்க! முக கவசம் தயாரிக்க பிரத்யேக இழை

திருப்பூர்:முக கவசம் தயாரிக்க, வைரசை கொல்லும் தன்மையுள்ள பிரத்யேக செயற்கை இழை, திருப்பூரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.உலகளாவிய வர்த்தக சந்தையில், செயற்கை இழை ஆடைகள் தேவை அதிகமாக உள்ளது. திருப்பூர் நிறுவனங்கள், இவ்வகை ஆடை தயாரிப்பில் ஈடுபடுவதற்கு உதவும்வகையில், ஏற்றுமதியாளர் சங்கம், பிர்லா நிறுவனத்தின் செயற்கை இழை உற்பத்தி பிரிவான கிராசிம் உடன் இணைந்து, பார்க் ரோட்டில், லிவா ஸ்டுடியோ செயல்படுத்தப்பட்டுவருகிறது.
இங்கு, கிராஸிம் நிறுவன தயாரிப்பிலான அனைத்து புதுவகை பஞ்சு, நுாலிழைகளும், நிரந்தரமாக காட்சிப்படுத்தப்படுகின்றன. தொழில் துறையினர், இவற்றை பார்வையிட்டு, தேவையான செயற்கை பஞ்சு, நுால் இழைகளை கொள்முதல் செய்கின்றனர்.கொரோனாவை தடுப்பதற்காக, மக்கள், துணி முக கவசங்களை அணிகின்றனர். திருப்பூர் ஆடை உற்பத்தி நிறுவனங்கள், உள்நாடு, வெளிநாட்டுக்கு தேவையான துணி முக கவசங்களை அதிகளவில் தயாரித்து வருகின்றன. துணி முக கவசங்கள், வைரஸ் தடுப்பு தன்மை பெற்றிருப்பதில்லை.
இச்சூழலில், கிராஸிம் நிறுவனம், முக கவசம் தயாரிப்பதற்கென்றே பிரத்யேகமான பஞ்சு உருவாக்கியுள்ளது. விஸ்கோஸ் பஞ்சுக்கு வைரஸ், பாக்டீரியா உள்ளிட்ட நுண்ணுயிர்களை கொல்லும் தன்மை அளிக்கப்பட்டுள்ளது. இந்த பஞ்சில் தயாரிக்கப்படும் முக கவசத்தை, 50 முறை சலவை செய்து, மீண்டும் மீண்டும் பயன்படுத்த முடியும்.மும்பையில் உள்ள பயோடெக் ஆய்வகம், இந்த இழையை ஆய்வுக்கு உட்படுத்தி, உறுதிப்படுத்தி சான்று வழங்கியுள்ளது. இந்த பிரத்யேக இழை, ஏற்றுமதியாளர் சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டு, திருப்பூரில் உள்ள லிவா ஸ்டுடியோவில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜாசண்முகம் கூறியதாவது:கொரோனாவுக்கு பின், திருப்பூர் பின்னலாடை நிறுவனங்கள், முக கவசம், முழு கவச ஆடை என, டெக்னிக்கல் டெக்ஸ்டைல்ஸ் என்கிற புதிய வழியில் பயணிக்க துவங்கியுள்ளன. இதற்கு பலம் சேர்க்கும்வகையில், பலதரப்பட்ட ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன.அவ்வகையில், கிராஸிம் நிறுவனம், துணி முக கவசம் தயாரிக்க, பிரத்யேகமாக, நுண்ணுயிர் கொல்லும் தன்மையுள்ள விஸ்கோஸ் இழையை உருவாக்கியுள்ளது. முக கவசம் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள், இந்த இழை குறித்து தெரிந்து, அவற்றை பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

மூலக்கதை