ஜார்ஜ் பிளாய்டுக்கு கண்ணீர் அஞ்சலி முடிவுக்கு வருமா போராட்டம்?

தினமலர்  தினமலர்
ஜார்ஜ் பிளாய்டுக்கு கண்ணீர் அஞ்சலி முடிவுக்கு வருமா போராட்டம்?


மினியாபொலிஸ்: சமீபத்தில், அமெரிக்க போலீசால் கொல்லப்பட்ட கறுப்பினத்தவரான ஜார்ஜ் பிளாய்டுக்கு, மினியாபொலிசில் உள்ள, வடக்கு சென்ட்ரல் பல்கலைக்கழகத்தில், நேற்று அஞ்சலி கூட்டம் நடைபெற்றது. இதில், அரசியல் தலைவர்கள், 'ஹாலிவுட்' பிரபலங்கள், இசை கலைஞர்கள் மற்றும் பொது மக்கள், திரளாக பங்கேற்று, பிளாய்டின் உடலுக்கு கண்ணீர் அஞ்லி செலுத்தினர்.


அமெரிக்காவில் போலீஸ்காரர் ஒருவர் தன் முழங்காலால் கழுத்தை நெருக்கியதில், ஜார்ஜ் பிளாய்டு என்ற ஆப்ரிக்க அமெரிக்கர் உயிரிழந்தார். இந்த சம்பவம், அமெரிக்கா மட்டுமின்றி, உலகம் முழுதும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. வழக்குப்பதிவுஆயிரக்கணக்கான மக்கள், வீதியில் இறங்கி, நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள், கைது செய்யப்பட்டனர்.ஜார்ஜ் பிளாய்டின் மரணத்துக்கு காரணமான போலீஸ்காரர் டெரிக் மற்றும் மூன்று பேர் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு, 40 ஆண்டுகள் வரை, சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இதில், கொலைக்கு காரணமான போலீஸ்காரர் டெரிக் தவிர, மற்ற மூவருக்கு, நேற்று ஜாமின் வழங்கப்பட்டது. இந்நிலையில், மினியாபொலிசில் உள்ள, வடக்கு சென்ட்ரல் பல்கலைக்கழகத்தில், ஜார்ஜ் பிளாய்டுக்கு, நேற்று அஞ்சலி கூட்டம் நடத்தப்பட்டது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட, பிளாய்டின் சவப் பெட்டிக்கு, அவரது குடும்பத்தினர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். அரசியல் தலைவர்கள், ஹாலிவுட் பிரபலங்கள், இசை கலைஞர்கள், பொது மக்கள் உள்ளிட்ட திரளான மக்கள், அஞ்சலி கூட்டத்தில் பங்கேற்றனர்.ஜார்ஜ் பிளாய்டின் கழுத்தில், போலீஸ்காரர் கால் முட்டியை வைத்து அழுத்தியபோது, அவர், எட்டு நிமிடங்கள், 46 நொடிகள் உயிருக்கு போராடி, துடிதுடித்து இறந்தார். எனவே, நேற்று நடந்த அஞ்சலி கூட்டத்தில் பங்கேற்றோர், எட்டு நிமிடங்கள், 46 நொடிகள், மவுன அஞ்சலி செலுத்தினர்.கூட்டத்தில், பேசிய சமூக செயற்பாட்டாளர், அல் ஷார்ப்டன், ஜார்ஜ் பிளாய்டின் மரணத்தை அடுத்து நடந்த போராட்டத்தை, அதிபர் டொனால்டு டிரம்ப் கையாண்ட விதத்தை, கடுமையாக விமர்சித்தார்.

உடைத்தெறியும் நேரம்மேலும், ''ஜார்ஜ் பிளாயிடுக்கு நடந்த கொடுமை, ஒவ்வொரு கறுப்பினத்தவருக்கும், தினம் தினம் இந்த நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது. அதை உடைத்தெறிய வேண்டிய நேரம் வந்துவிட்டது. ''கறுப்பின மக்களின் கழுத்தின் மீது, நீண்ட காலமாக அழுத்திக் கொண்டிருக்கும், கால் முட்டியை, அகற்ற வேண்டிய நேரமிது,'' என, அவர் கூறினார்.ஜார்ஜ் பிளாய்டின் சகோதரர், பிலோன்ஸ் பிளாய்டு, தங்கள் குழந்தைப் பருவ நினைவுகளை, நெகிழ்வுடன் பகிர்ந்து கொண்டார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, ஆயிரம் பேர் அமரும் வசதி கொண்ட அரங்கில், 500 பேர் மட்டுமே, அனுமதிக்கப்பட்டனர்.


பிளாய்டு பிறந்த ஊரான, வடக்கு கரோலினாவில் உள்ள ரேபோர்டு என்ற இடத்திற்கு, அவரது உடல், இன்று எடுத்து செல்லப்படுகிறது. அங்கும் அஞ்சலி கூட்டம் நடத்தப்படுகிறது. அதன் பின், பிளாய்டு தன் வாழ்நாளின் பெரும்பாலான பகுதிகளை கழித்த, ஹூஸ்டன் நகரில், அவரது இறுதி சடங்கு, நாளை மறுதினம் நடைபெறுகிறது.இதற்கிடையே, அமெரிக்காவின் பல மாகாணங்களில், வன்முறை வெடித்ததை அடுத்து, பல நகரங்களில், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தற்போது, மக்கள் அமைதிப் போராட்டங்களில் ஈடுபடுவதை அடுத்து, லாஸ் ஏஞ்சல்ஸ், சான் பிரான்சிஸ்கோ உள்ளிட்ட பல்வேறு நகரங்களில், நேற்று முதல், ஊரடங்கு உத்தரவு, விலக்கிக் கொள்ளப்பட்டது.

மூலக்கதை