கொரோனா பாதிப்பு அதிர்ச்சி தருகிறார் அறுவை சிகிச்சை நிபுணர்

தினமலர்  தினமலர்
கொரோனா பாதிப்பு அதிர்ச்சி தருகிறார் அறுவை சிகிச்சை நிபுணர்

சென்னை; ''தமிழகத்தில், கொரோனா பாதிப்பு, 15 நாட்களில் இரு மடங்காக அதிகரிக்கும். 1.3 லட்சம் பேர் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது,'' என, ஓய்வுபெற்ற டாக்டர், அமலோற்பவநாதன் கூறினார்.

சென்னை, ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை, ரத்த குழாய் அறுவை சிகிச்சை துறையின், முன்னாள் இயக்குனர் டாக்டர் அமலோற்பவநாதன். இவர், அரசின் உடல் உறுப்பு தான ஆணைய இயக்குனராகவும் இருந்தவர். இவர், கொரோனா வைரஸ் பற்றிய, வீடியோ பதிவு வெளியிட்டுள்ளார்.

அதில், அவர் கூறியிருப்பதாவது:தமிழகத்தில், கொரோனா பாதிப்பு அதிர்ச்சியளிக்கிறது. நேற்று முன்தினம் வரை, 27 ஆயிரத்து, 256 பேர், கொரோனாவால் பாதிக்கப் பட்டுள்ளனர். சென்னையில் மட்டுமே, 18 ஆயிரத்து, 693 பேருக்கு பாதிப்பு உள்ளது. மொத்த பாதிப்பில், 68 சதவீதம், சென்னையில் மட்டுமே உள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பில், முன்னிலையில் உள்ள, மஹாராஷ்டிரா மாநிலத்தின், மொத்த பாதிப்பில், மும்பை நகரில், 60 சதவீதம் பேர் உள்ளனர். மும்பை நகரை விட, சென்னை நகரத்தில் நோயாளிகளின் அடர்த்தி அதிகமாக உள்ளது.தமிழகத்தில், வரும், 15 நாட்களுக்குள், இந்த எண்ணிக்கை இரட்டிப்பாகும். நோயாளிகள் எண்ணிக்கை, இரட்டிப்பாகும் நாட்கள், 14ல் இருந்து, 13 ஆகியுள்ளன. தமிழ்நாடு எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை, சில ஆராய்ச்சி முடிவுகளை வெளியிட்டுள்ளது.

அதில், ஜூன் மாத இறுதிக்குள், சென்னையில், 70 ஆயிரம் பேர் உட்பட, தமிழகத்தில், 1.3 லட்சம் கொரோனா நோயாளிகள் இருப்பர்; இறப்பு, 748 ஆக இருக்கும் என, கணக்கிடப்பட்டுள்ளது. அக்., 15ல் உச்சம்? தற்போது, கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது; ஆனால், குறையவில்லை. தமிழகத்தில் கொரோனா, அக்., 15ல் உச்சக்கட்டத்தை அடையும். சென்னையில், அக்டோபர் முதல் வாரத்தில், உச்சக் கட்டம் வரும் என, எதிர்ப்பார்க்கப்படுகிறது.

உச்சநிலை காலம் எத்தனை நாள் நீட்டிக்கும் என, தெரியவில்லை. உச்சநிலை மாறி, அதன் தாக்கம் குறைய, இரண்டு மாதங்களாகலாம். இவையெல்லாம், நமக்கு கவலை தரும் விஷயங்கள். எனவே, அக்., மாதம் வரை மட்டுமல்ல, டிச., இறுதி வரையிலும், நாம் மிக மிக பாதுகாப்புடன் இருக்க வேண்டும்.

எந்த எண்ணிக்கையையும் எதிர்கொள்ள, அரசும் தயராக இருக்க வேண்டும். பெரிய அளவிலான மருத்துவ கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும். இந்த பெரிய அளவிலான எண்ணிக்கைக்கு, அரசுடன், நாமும் மனதளவில் தயாராக வேண்டும்.தமிழக மக்கள் இதுநாள் வரை, பாதுகாப்புடன் இருந்தது போல, வருங்காலங்களிலும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

அரசின் வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும். முகக் கவசம் இல்லாமல், வெளியே செல்லாதீர்; வெளியே செல்லும்போது, சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். தேவையில்லாமல், வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். இவற்றை பின்பற்றினால், ஓரளவு இந்நோயை வெற்றிகரமாக எதிர்கொள்ளலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.

மூலக்கதை