'நாமே தீர்வு' இயக்கம் துவக்கினார் நடிகர் கமல்

தினமலர்  தினமலர்
நாமே தீர்வு இயக்கம் துவக்கினார் நடிகர் கமல்

சென்னை; ''நாமே தீர்வு இயக்கத்தில், தன்னார்வலர்கள் இணைந்து, கொரோனாவை விரட்டும் பணியில் ஒத்துழைப்பு தர வேண்டும்,'' என, கமல் கோரிக்கை விடுத்துள்ளார்.

மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல், நேற்று, 'ஆன்லைன்' வழியாக பேட்டி அளித்தார்.அப்போது, அவர் கூறியதாவது: உலகத்தை பசுமையாக மாற்ற, பல ஆண்டுகளாக போராடும் நாம், இன்று சென்னையை, வேறு ஒரு பச்சைக்கு மாற்ற வேண்டியுள்ளது.

கொரோனாவுக்கு எதிரான போரில், என்ன செய்வர் என, காத்திருப்போருக்கும்; ஏதாவது செய்வர் என பார்த்து களைத்தவர்களுக்கும், நாமாவது ஏதாவது செய்ய வேண்டும் என்ற, நோக்கில் உருவானதே, 'நாமே தீர்வு!'என்னை போன்ற பலரது கனவை நனவாக்கிய, சென்னையை மீட்டெடுக்கும், ஒரு முயற்சி இது. ஊரடங்கு தளர்ந்து, மக்கள் வெளியே வரத் துவங்கியுள்ள நேரத்தில், அவர்களை பாதுகாக்க வேண்டும். ஒருவரை, ஒருவர் காப்போம் என, நாம் அனைவரும் முன்வர வேண்டும்.இந்த இயக்கத்தில் ஆர்வமுள்ள தன்னார்வலர்களை சேர அழைக்கிறோம்.

இந்த இயக்கம் மூலம், பல இடங்களில், 'சானிடைசர்' வைப்போம்; முக கவசம் வழங்குவோம். இதற்கு பல தன்னார்வலர்கள் பங்களிப்பு தேவை. இதில் சேரவும், பிரச்னையை தெரிவிக்கவும், 63698 11111 என்ற, மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். கொரோனா அலை, மீண்டும் மீண்டும் வரும் என்பது உறுதி.எந்த அரசும் தனியாக செய்ய முடியாது; மக்களின் உதவியை ஏற்க வேண்டும்.

உதாரணத்திற்கு, கேரளா, ஒடிசா, கர்நாடகா அரசுகளை சொல்லலாம்.கிரிக்கெட் வேண்டாம் என்பது போல, சினிமாவும் வேண்டாம் என்றால், ஏற்று தான் ஆக வேண்டும். கட்டுப்பாடு என வரும்போது, நாட்டுக்காக அதை செய்ய வேண்டும். மீண்டும், ஊரடங்கு என்றால், ஏழைகள் தாங்க மாட்டர். மற்ற நாடுகள் செய்த தவறையே, நாமும் செய்கிறோம்; சரித்திரத்தை பார்த்து கற்கவில்லை. இன்னும் கொஞ்சம் முன்யோசனையுடன் செயல்பட்டிருக்கலாம்.இவ்வாறு, கமல் கூறினார்.

மூலக்கதை