பேச்சு மூலம் தீர்வு: இந்தியா - சீனா சம்மதம்

தினமலர்  தினமலர்
பேச்சு மூலம் தீர்வு: இந்தியா  சீனா சம்மதம்

புதுடில்லி:எல்லைப் பிரச்னைக்கு, பேச்சு வார்த்தை மூலம் சுமுக தீர்வு காண, இந்தியாவும், சீனாவும் சம்மதித்துள்ளன.

அண்டை நாடான சீனாவுக்கும், நமக்கும் நீண்ட காலமாக எல்லை பிரச்னை உள்ளது. சமீபத்தில், லடாக் பகுதி அருகே, சீன ராணுவ வீரர்கள் அத்துமீறி நுழைந்தனர். இதையடுத்து, இரு தரப்புக்கும் இடையே மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டது. எல்லையில் இரு நாடுகளின் வீரர்களும் குவிக்கப்பட்டனர்; பதற்றம் நிலவியது. இரு நாட்டு அதிகாரிகளும் நடத்திய தொடர் பேச்சுக்குப் பின், தற்போது பதற்றம் குறைந்துள்ளது.

எல்லைப் பிரச்னை

இந்நிலையில், இரு நாட்டு வெளியுறவு அமைச்சக அதிகாரிகளுக்கு இடையே, நேற்று முக்கிய பேச்சு நடந்தது. 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நடந்த பேச்சில், கிழக்கு ஆசியாவுக்கான இந்திய வெளியுறவு அமைச்சக இணைச் செயலர், நவீன் ஸ்ரீவத்சவா பங்கேற்றார். சீனா தரப்பில், அந்நாட்டு வெளியுறவு அமைச்சக தலைமை இயக்குனர், வூ ஜியாங் ஹோ பங்கேற்றனர்.

இந்தப் பேச்சு பற்றி, நம் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது: எல்லையில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை உட்பட, இரு நாடுகளுக்கு இடையே உள்ள உறவுகள் பற்றி, இருதரப்பிலும் விரிவாக பேசப்பட்டது. இரு நாட்டு தலைமைகளின் வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டு, எல்லைப் பிரச்னை உட்பட, அனைத்து பிரச்னைகளுக்கு பேச்சு மூலம் சுமூக தீர்வு காண, இரு நாடுகளுக்கு இடையே, ஒருமித்த கருத்து ஏற்பட்டது.இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நடைமுறை

முன்னதாக, சீன வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் கெங் சுயாங் கூறியதாவது: எல்லையில் தற்போது அமைதி நிலவுகிறது. எல்லா பிரச்னைக்கும் பேச்சு மூலம் தீர்வு காண முடியும். இதற்கு முன்பும், எல்லை பிரச்னையின் போது, இரு நாடுகளும், பலமுறை சுமுக தீர்வு கண்டுள்ளன. அதற்கான நடைமுறை இரு நாடுகளுக்குமே தெரியும். இவ்வாறு, அவர் கூறினார். இதற்கிடையே, இந்தியாவுடனான எல்லையில், சீன வீரர்களின் கண்காணிப்பு பணிகளுக்கு தலைமை தாங்குவதற்காக, லெப்டினன்ட் ஜெனரல் சூ கிலிங் என்பவரை, சீன ராணுவம் நியமித்துள்ளது.

மூலக்கதை