மங்காத்தா சூதாட்டம் போல மின் கட்டண வசூல்: ஸ்டாலின்

தினமலர்  தினமலர்
மங்காத்தா சூதாட்டம் போல மின் கட்டண வசூல்: ஸ்டாலின்

சென்னை:'மங்காத்தா சூதாட்டம் போல, மின் கட்டண வசூலில், அ.தி.மு.க., அரசு ஈடுபடுகிறது' என, தி.மு.க., தலைவர், ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

அவரது அறிக்கை:ஊரடங்கால், மின் கணக்கீடு எடுக்க முடியவில்லை என்ற காரணத்தால், முந்தைய மாதங்களில், மின் நுகர்வோர் செலுத்திய கட்டணத்தை, மார்ச், ஏப்., மாதங்களுக்கும் செலுத்தலாம் என, அ.தி.மு.க., அரசு அறிவித்தது.அதை அப்படியே நம்பிய அப்பாவி மக்களுக்கு, தற்போது மிகப்பெரிய ஏமாற்றமாகி, அதுவும் அ.தி.மு.க., அரசின், 110 அறிவிப்புகள் போல மாறி, கொரோனா துயரத்தில் மூழ்கியிருக்கும் மக்களுக்கு, 'ஷாக்' ஏற்படுத்தி இருக்கிறது.

நடிகர் பிரசன்னா இதுகுறித்து கேள்வி எழுப்பியும், அதற்கு முறையாக, நியாயமான பதில் அளிக்கவில்லை. அதற்கு பதிலாக, பழிவாங்கும் விதமாக, அவரது மின் கட்டணத்தையே ஆய்வு செய்து, அரசியல் ரீதியாக விளக்கம் கொடுத்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.நான்கு மாத மின் நுகர்வை, இரண்டு மாத மின் நுகர்வாக, இரண்டு தரம் பிரிக்காமல் கட்டணம் வசூலிப்பது தான், இந்த பிரச்னைக்கு காரணம்.கொரோனா காலத்தில், மக்களிடம் மங்காத்தா சூதாட்டம் போல, மின்கட்டண வசூலில், ஈடுபட்டு கெடுபிடி செய்வது, பொறுத்து கொள்ள முடியாதது.இவ்வாறு, ஸ்டாலின் கூறியுள்ளார்.

மூலக்கதை