நார்வேயில் நிலச்சரிவால் கடலுக்குள் அடித்து செல்லப்பட்ட வீடுகள்

தினமலர்  தினமலர்
நார்வேயில் நிலச்சரிவால் கடலுக்குள் அடித்து செல்லப்பட்ட வீடுகள்

ஒஸ்லோ : நார்வே நாட்டில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலச்சரிவை தொடர்ந்து 8 வீடுகள் கடலில் அடித்து செல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நார்வே நாட்டின் வடக்கில் அமைந்துள்ள ஆல்டா நகரில் நேற்று (ஜூன் 4) கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவு 650 மீட்டர் முதல் 800 மீட்டர் அகலமும், 40 மீட்டர் உயரமும் கொண்டதாக பதிவாகியுள்ளது. தனது வீட்டில் சாண்ட்விச் தயாரித்து கொண்டிருந்த ஜான் எகில் பக்கெடால் என்பவர் மிகப்பெரிய சத்தம் கேட்டு, வெளியில் வந்து பார்த்துள்ளார். உடனடியாக உயிரை காப்பாற்றி கொள்ள அருகில் உள்ள மலைப்பகுதிக்கு ஓடிய ஜான் எகில், அங்கிருந்தப்படியே வீடுகள் கடலுக்கு அடித்து செல்லப்படுவதை வீடியோவாக படம்பிடித்துள்ளார்.


வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றும், நாய் ஒன்றும் நிலச்சரிவில் கடலுக்குள் மூழ்கின. அதிர்ஷ்டவசமாக நாய் கடலில் நீந்தி உயிர் பிழைத்தது. வேறு எந்த உயிரிழப்பும் பதிவாகவில்லை என நார்வே போலீசார் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து அடுத்தடுத்து லேசான நிலச்சரிவு ஏற்பட்டது. எனவே அருகில் உள்ள வீடுகளில் வசித்த மக்கள், வேறு பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.

மூலக்கதை