அமெரிக்க போராட்டத்திற்கு ஆதரவளித்த டிரம்பின் மகள்..!

தினமலர்  தினமலர்
அமெரிக்க போராட்டத்திற்கு ஆதரவளித்த டிரம்பின் மகள்..!

வாஷிங்டன் : அமெரிக்காவில் ஜார்ஜ் பிளாய்டு கொலை நீதி கேட்டு நடக்கும் போராட்டத்திற்கு, அமெரிக்க அதிபர் டிரம்பின் இளைய மகளான டிப்பானி டிரம்ப் சமூகவலைதளங்களில் ஆதரவு தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் மினியாபொலிசில், போலீஸ்காரர் ஒருவர், கால் முட்டியால் கழுத்தில் நெருக்கியதில், ஆப்ரிக்க அமெரிக்கரான, ஜார்ஜ் பிளாய்டு (46) உயிரிழந்தார். இதனை தொடர்ந்து கடந்த ஒருவாரத்திற்கு மேலாக அமெரிக்கா முழுவதும் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. சில மாகாணங்களில் போராட்டகாரர்கள் கடைகளை சூறையாடியதுடன், வன்முறையில் இறங்கியதால் பதற்றம் நீடிக்கிறது. சில நாட்களுக்கு முன் ஜார்ஜ் பிளாய்டு கொலைக்கு நீதி கேட்டு வெள்ளை மாளிகை முன் திரண்ட போராட்டகாரர்களை கண்ணீர் புகைக்குண்டு வீசி போலீசார் கலைத்தனர்.

இதனை தொடர்ந்து அருகில் உள்ள சர்ச்சில் நடந்த நிகழ்ச்சியில், கையில் பைபிளுடன் டிரம்ப் போட்டோவிற்கு போஸ் கொடுத்தது விமர்சனத்துக்கு உள்ளாகியது. இதனை தொடர்ந்து 26 வயதாகும் சட்டக்கல்லூரி மாணவியான டிப்பானி டிரம்பிடம், போராட்டம் குறித்து அதிபர் டிரம்பிடம் எடுத்து கூறுமாறு சமூகவலைதளங்களில் போராட்டகாரர்கள் வலியுறுத்தி இருந்தனர்.

இதனிடையே சமூகவலைதளமான இன்ஸ்டா மற்றும் டுவிட்டரில், போலீசாரின் அட்டூழியம் மற்றும் கறுப்பின மக்களுக்கு எதிரான பாகுபாட்டை கண்டித்து #blackoutTuesday என்ற ஹேஷ்டேக்கில் பலரும் கருப்பு புகைப்படங்களை பதிவு செய்தனர். டிப்பானியும் தனது இன்ஸ்டாவில் போராட்டங்களுக்கு ஆதரவாக கருப்பு புகைப்படம் ஒன்றை பகிர்ந்ததுடன், 'தனியாக நாம் மிகக் குறைவாகவே சாதிக்க முடியும். ஒன்றாக நாம் இவ்வளவு சாதிக்க முடியும்' என ஹெலன் கெல்லரின் வாக்கியத்தை பதிவிட்டிருந்தார். பலரும் டிப்பானி டிரம்பின் ஆதரவிற்கு பாராட்டு தெரிவித்தனர். டிப்பானியின் தாயும், டிரம்பின் இரண்டாவது மனைவியுமான மார்லா மேப்பிள்ஸ், கருப்பு புகைப்படத்தை பகிர்ந்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார்.

மூலக்கதை