வேறு ஸ்டேஷனுக்கு மாற்றியதால் மாலை போட்டு ஊர்வலம்; ‘பிரியாவிடை’ இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்: உத்தரபிரதேச போலீசில் காமெடி

தமிழ் முரசு  தமிழ் முரசு
வேறு ஸ்டேஷனுக்கு மாற்றியதால் மாலை போட்டு ஊர்வலம்; ‘பிரியாவிடை’ இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்: உத்தரபிரதேச போலீசில் காமெடி

லக்னோ: உத்தரபிரதேசத்தில் வேறு போலீஸ் ஸ்டேஷனுக்கு இடமாற்றம் செய்யப்பட்ட இன்ஸ்பெக்டருக்கு மாலை அணிவித்து ‘பிரியாவிடை’ கொடுத்ததால், அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். உத்தரபிரதேச மாநிலம் பாஸ்கரி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மனோஜ் குமார் சிங் என்பவர், கடந்த சில நாட்களுக்கு முன், ஜெய்த்பூர் காவல் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

அதையடுத்து மனோஜ் குமாருக்கு பிரியாவிடை அளிக்க சக போலீசார் முடிவு செய்தனர். அதன்படி, இன்ஸ்பெக்டர் மனோஜ் குமாருக்கு மாலை அணிவித்து காரில் அழைத்து சென்றதோடு அவருக்கு பின்னால் பைக்கில் 10 போலீசார் வரிசையாக ஊர்வலம் சென்றனர்.

அப்போது இன்ஸ்ெபக்டருக்கு மாலை, மரியாதை செய்து, மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கையை கடைபிடிக்கப்படாமல்,

இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற எவரும் முகக் கவசமோ, சமூக இடைவெளியோ பின்பற்றவில்லை.

இதுகுறித்த வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலானது. அதில், கொரோனா காலத்தில், இன்ஸ்பெக்டருக்கு பிரியாவிடை கொடுக்கிறார்களா? பிரியும் விடை கொடுக்கிறார்களா? என்று கிண்டல் பதிவுகளும் இருந்தன.

அதிர்ச்சியடைந்த உத்தரபிரதேச போலீஸ் அதிகாரிகள், உடனடியாக இன்ஸ்பெக்டர் மனோஜ் குமாரை சஸ்பெண்ட் செய்தும், பைக்கில் வலம் வந்த 10 போலீசாரை வெவ்வேறு மாவட்டத்துக்கு இடமாற்றம் செய்தும் உத்தரவிட்டுள்ளனர். இச்சம்பவம் உத்தரபிரதேசத்தில் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து, அம்பேத்கர் நகர் போலீஸ் ஏஎஸ்பி அவனிஷ் குமார் மிஸ்ரா கூறுகையில், “பாஸ்காரி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மனோஜ் குமார் சிங்கிற்கு பிரியாவிடை விழா ஏற்பாடு செய்யப்பட்டது.

ஏற்கனவே அவர் செவ்வாய்க்கிழமை ஜெய்த்பூர் காவல் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

அதே நேரத்தில் ஜெய்த்பூர் இன்ஸ்பெக்டர், பாஸ்காரிக்கு இடமாற்றப்பட்டார். கடந்த புதன்கிழமை அன்று சில போலீஸ்காரர்களும், குடியிருப்பாளர்களும் சேர்ந்து இன்ஸ்பெக்டரை ஊர்வலமாக அழைத்து சென்று கவுரவப்படுத்தி உள்ளனர்.

எவரும், முகக் கவசம் கூட அணியவில்லை. இதனால், இன்ஸ்பெக்டர் மனோஜ் குமார் சிங் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

10 போலீசார் வேறு மாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்’ என்றார்.


.

மூலக்கதை