ஊரடங்கு உத்தரவை மீறி சுற்றியதாக வாகன ஓட்டிகளிடம் ரூ10.21 கோடி அபராதம் வசூல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஊரடங்கு உத்தரவை மீறி சுற்றியதாக வாகன ஓட்டிகளிடம் ரூ10.21 கோடி அபராதம் வசூல்

சென்னை: ஊரங்கு உத்தரவை மீறி மாநிலம் முழுவதும் வாகனங்களில் சுற்றிய நபர்களிடம் இருந்து ரூ. 10. 21 கோடி பணம் அபராதமாக போலீசார் வசூலித்துள்ளனர். கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் 24ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அப்போது தடையை மீறி வாகனங்களில் சுற்றிய நபர்களை டிஜிபி திரிபாதி உத்தரவுப்படி போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் நோய் தாக்கத்திற்கு ஏற்றப்படி ஊரடங்கு உத்தரவை மாநில அரசு படிப்படியாக சில கட்டுப்பாடுகளுடன் தளர்த்தியது.

5ம் கட்டமாக கடந்த 1ம் தேதி முதல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களை தவிர்த்து தமிழகம் முழுவதும் பிற மாவட்டங்களை மண்டல வாரியாக பிரித்து பொது போக்குவரத்துக்கு அரசு அனுமதி வழங்கியது.

அதேநேரம் இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணி வரை மாநிலம் முழுவதும் தற்போது நடைமுறையில் உள்ளது.

அந்த வகையில் அரசு உத்தரவை மீறி வாகனம் ஓட்டியதாக இன்று காலை வரை மாவட்ட வாரியாக போலீசார் 5 லட்சத்து 44 ஆயிரத்து 566 வழக்குகள் பதிவு செய்து 5 லட்சத்து 82 ஆயிரத்து 877 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அனைவரையும் சொந்த ஜாமீனில் போலீசார் விடுவித்தனர்.

அவர்களிடம் இருந்து 4 லட்சத்து 48 ஆயிரத்து 566 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், போக்குவரத்து விதிகளை மீறியதாக 10 கோடியே 21 லட்சத்து 80 ஆயிரத்து 599 ரூபாய் அபராதமாக போலீசார் வசூலித்துள்ளனர்.

இந்த நடைமுறை வரும் 30ம் தேதி வரை நீடிக்கும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

.

மூலக்கதை