நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் 12 பேருக்கு கொரோனா பாதிப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் 12 பேருக்கு கொரோனா பாதிப்பு

நெல்லை: நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் மேலும் 12 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக உள்மாவட்ட அளவில் தொற்று எண்ணிக்கை அதிகமாக உள்ளது. கடந்த 2ம் தேதி 51 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், நேற்று 7 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் மாவட்டத்தில் மொத்த பாதிப்பு 301 ஆக உயர்ந்துள்ளது. தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் 139 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில், நேற்று 11 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

கடந்த 2ம் தேதி இலங்கையில் இருந்து கப்பல் மூலம் வந்தவர்களில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 58 பேரும் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களது ரத்தம், சளி மாதிரிப் பரிசோதனையில் யாருக்கும் கொரோனா இல்லை என நேற்று தெரியவந்துள்ளது. மேலும் வடமாநிலங்கள், வெளிமாவட்டங்களில் இருந்து வருவோரை கண்காணிக்க, மாவட்ட எல்லை பகுதியில் உள்ள 15 செக்போஸ்டுகளிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

நெல்லை மாவட்டத்தில் நேற்று மேலும் 3 பேருக்கு கொரோனா உறுதியானது. இதில் ஒருவர் மட்டும் வெளிமாநிலத்தில் இருந்து சொந்த ஊர் வந்தவர்.

மாவட்டத்தில் மொத்த பாதிப்பு 381 ஆனது.

இவர்கள், நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேற்று ஒரே நாளில் 55 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் மும்பையில் இருந்து சொந்த மாவட்டத்திற்கு வந்தவர்கள்.

வீடு திரும்பிய அனைவரும் தொடர்ந்து குறிப்பிட்ட நாட்கள், வீடுகளிலேயே தனிமையில் இருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். தென்காசி மாவட்டத்தில் நேற்று இருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

மாவட்டத்தில் இதுவரை 96 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

.

மூலக்கதை