தமிழக எல்லையில் உள்ள மாதேஸ்வரன் மலை கோவிலில் கர்நாடக பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி: தமிழக பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு!

தினகரன்  தினகரன்
தமிழக எல்லையில் உள்ள மாதேஸ்வரன் மலை கோவிலில் கர்நாடக பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி: தமிழக பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு!

சாம்ராஜ் நகர்: தமிழக எல்லையில் உள்ள மாதேஸ்வரன் மலை கோவிலுக்கு செல்ல தமிழக பக்தர்களுக்கு கர்நாடகா அரசு தடை விதித்துள்ளது. தமிழர்கள் மூலம் கொரோனா தொற்று ஊடுருவி விடக்கூடாது என்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேட்டூர் எல்லைாயன பாலாறில் இருந்து 25 கி.மீ தொலைவில் உள்ள மாதேஸ்வரன் கோவில் கர்நாடகா மாநிலத்தில் உள்ள சிவாலயங்களில் மிகவும் முக்கியமானதாகும். இந்த கோவிலுக்கு தமிழகத்தில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் இங்கு வழிபாட்டுக்கு செல்வதுண்டு. கொரோனா பரவல் காரணமாக 2 மாதங்களாக மூடப்பட்டிருந்த இந்த கோவில், கடந்த திங்கட்கிழமை திறக்கப்பட்டது. ஆனால், கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே வழிபாட்டுக்கு அனுமதிக்கப்படுகின்றனர். தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு அனுமதியில்லை. இதற்கான உத்தரவை சாம்ராஜ் நகர் மாவட்ட ஆட்சியர் பிறப்பித்துள்ளார். தமிழக எல்லை பகுதியான மேட்டூர், கொளத்தூர், கோவிந்தபாடி, காரைக்காடு உள்ளிட்ட இடங்களில் உள்ள பக்தர்கள் பாலாறு எல்லையிலேயே தடுத்து நிறுத்தப்படுகின்றனர். கர்நாடகா இருப்பிட சான்று உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். வனப்பகுதி வழியாக கோவிலுக்கு பக்தர்கள் வருவதை தடுக்கும் வகையில், வனப்பகுதியில் உள்ள அனைத்து வழித்தடங்களும் மூடப்பட்டுள்ளன. கோவிலில் பக்தர்கள் தங்கவும், தலைமுடி காணிக்கை கொடுக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்தால் மட்டுமே தமிழக பக்தர்கள் மாதேஸ்வரன் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று சாம்ராஜ் நகர் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

மூலக்கதை