கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் சென்னையில் இன்று 7 பேர் உயிரிழப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் சென்னையில் இன்று 7 பேர் உயிரிழப்பு

சென்னை: சென்னையில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் கடந்த 24 மணி நேரத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

தினம் தோறும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டுகிறது. குறிப்பாக, சென்னையில் பாதிப்பு அதிகளவில் காணப்படுகிறது.

இதுவரையில் சென்னையில் மட்டுமே 18,693 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். முதல் இரண்டு கட்ட ஊரடங்கின் போது கட்டுப்பாட்டில் இருந்த கொரோனா பாதிப்பு மூன்றாம் கட்ட ஊரடங்கிற்கு பிறகு அதிகரித்து வந்தது.

தற்போது அரசின் பல்வேறு தளர்வுகளால் நாள் தோறும் சென்னையில் பாதிப்பு ஆயிரத்தை கடந்து வருகிறது. சென்னையில் எந்த அளவிற்கு கொரோனா பரவல் காணப்படுகிறதோ அந்த அளவிற்கு இறப்பின் எண்ணிக்கையும் நாள்தோறும் அதிகரித்து வருகிறது.



இந்தநிலையில், கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 7 பேர் உயிரிழந்துள்ளனர். அதன்படி, கே. எம். சி மருத்துவமனையில் 3 பேரும், ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் 2 பேரும், ஸ்டான்லி மருத்துவமனையில் 2 பேரும் என 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதில், கே. எம். சி மருத்துவமனையில் 36 வயது பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதேபோல், உயிரிழந்த மற்ற 6 பேரில் 2 பேர் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள், 4 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள்.

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 12 பேர் உயிரிழந்த நிலையில் சென்னையில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் 7 பேர் உயிரிழந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

.

மூலக்கதை