தலைமை செயலகத்தில் 50 பேருக்கு கொரோனா; அமைச்சர்கள், அதிகாரிகள் பீதி: துறை அலுவலகங்கள் வெறிச்; பணிகள் முடக்கம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
தலைமை செயலகத்தில் 50 பேருக்கு கொரோனா; அமைச்சர்கள், அதிகாரிகள் பீதி: துறை அலுவலகங்கள் வெறிச்; பணிகள் முடக்கம்

சென்னை: சென்னை, தலைமை செயலகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள், உயர் அதிகாரிகள் என 50க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் அமைச்சர்கள், ஐஏஎஸ் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் யாரும் தலைமை செயலகம் வரவில்லை.

இதனால் பணிகள் முழுமையாக முடங்கியுள்ளன. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது.

ஆனாலும், கடந்த மாதம் 4ம் தேதி முதல் ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டது. அதன்படி அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்கள், தொழிற்சாலைகள், பொது போக்குவரத்து உள்ளிட்டவைகள் இயங்க தொடங்கின.

தற்போது வழிபாட்டு தலங்கள், சுற்றுலா தலங்களுக்கு மட்டுமே இன்னும் அனுமதி கொடுக்கப்படவில்லை.

இந்த நிலையில், தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் நேற்று மட்டும் 1,384 பேருக்கு கொரோனா பாசிட்டிவ் கண்டுபிடிக்கப்பட்டது.

இதில் சென்னையில் மட்டும் 1,072 பேர் கொரோனா நோயால் பாதித்துள்ளனர். இதுவரை தமிழகத்தில் 220 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

அதேபோன்று இதுவரை தமிழகத்தில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 27,256ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் கடந்த 4 நாட்களாக நோய் பாதிப்பு தினசரி 1000த்தை தாண்டி வருகிறது.

மாநகராட்சி அதிகாரிகள் எவ்வளவோ தடுப்பு நடவடிக்கைகளை அறிவித்தாலும், பொதுமக்களின் அலட்சியம் காரணமாக நோயாளிகளின் எண்ணிக்கை தினசரி அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த எண்ணிக்கை வரும் நாட்களில் இன்னும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் சென்னை, தலைமை செயலகத்தில் இதுவரை 50க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருவது உறுதியாகி உள்ளது.

குறிப்பாக 44 வயதுள்ள ஒரு பெண் ஐஏஎஸ் அதிகாரி ஒருவருக்கு 2 நாட்களுக்கு முன் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர் தற்போது வீட்டில் இருந்தபடி சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.

அவரை தொடர்ந்து சில ஐஏஎஸ் அதிகாரிகளுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தலைமை செயலகத்தில் 9வது மாடியில் உள்ள செய்தி மக்கள் தொடர்பு பெண் அதிகாரி மற்றும் அவரது உதவியாளருக்கு கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

2வது மாடியில் தகவல் தொழில்நுட்ப பிரிவில் உள்ள ஒரு பெண், பொதுத்துறை, சமூகநலத்துறை, பொதுப்பணித்துறை, வணிக வரித்துறை, முதல்வரின் செயலாளர் பிரிவு, நிதித்துறை உள்ளிட்ட பல துறைகளில் உள்ள ஊழியர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு, மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

கடந்த 10 நாட்களில் மட்டும் சென்னை, தலைமை செயலகத்தில் 50க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தலைமை செயலக ஊழியர் அனைவரும் அச்சத்தில் உள்ளனர்.

தலைமை செயலகத்தில் இருந்துதான், கொரோனா ஒழிப்பு பணிக்காக என்னென்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவுகளை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த 2 மாதமாக பிறப்பித்து வந்தார். தற்போது, அந்த தலைமை அலுவலகத்திலேயே கொரோனா என்ற அரக்கன் ஆட்டிப்படைப்பதால் என்ன செய்வது என்று தெரியாமல் சுகாதாரத்துறை அதிகாரிகளே திணறி வருகிறார்கள்.

தலைமை செயலகத்தில் 50க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா வந்துள்ளதை தொடர்ந்து, கடந்த சில நாட்களாக அமைச்சர்கள் யாரும் கோட்டை பக்கம் வருவதே இல்லை. வீட்டில் இருந்தபடியே பணிகளை கவனித்து வருகின்றனர்.

இதேபோன்று பெரும்பாலான ஐஏஎஸ் அதிகாரிகளும் கோட்டைக்கு வருவது இல்லை.

முதல்வர் எடப்பாடியும் கடந்த மூன்று நாட்களாக தலைமை செயலகம் வரவில்லை.

துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் இருந்தபடியே பணிகளை கவனித்து வருவதாக கூறப்படுகிறது. வெளிமாவட்டங்களில் உள்ள அமைச்சர்கள் தங்கமணி, வீரமணி, காமராஜ், செல்லூர் ராஜு உள்ளிட்ட சிலர் சென்னை வந்தாலும் கூட தலைமை செயலகம் பக்கம் வருவதில்லை.

அமைச்சர்களின் பிஏக்களும் கடந்த சில நாட்களாக தலைமை செயலகத்துக்கு வர வேண்டாம் என்று அமைச்சர்கள் உத்தரவிட்டுள்ளனர். அதேபோன்று, தலைமை செயலக ஊழியர்கள் 50 சதவீதம் பேர் சுழற்சி முறையில் பணிக்கு வர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது.

ஆனாலும், பெரும்பாலான ஊழியர்கள் கொரோனா பீதி காரணமாக வேலைக்கு வருவதில்லை. அவர்கள் வராவிட்டாலும், உயர் அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை என்றே கூறப்படுகிறது.

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் அதுவும் அனைத்து உத்தரவுகளையும் பிறப்பிக்கும் தலைமை செயலகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் விரட்டி விரட்டி தாக்குவதால் அரசு ஊழியர்கள் மட்டுமின்றி, அரசும், பொதுமக்களும் மிகவும் கவலை அடைந்துள்ளனர்.

அதிகாரிகள் 70 சதவீதத்துக்கு மேல் யாரும் பணிக்கு வரவில்லை.

இதனால் பணிகள் முழுமையாக முடங்கியுள்ளன.

.

மூலக்கதை