மல்லையாவை இந்தியா அழைத்து வருவதில் சட்ட சிக்கல்கள்: பிரிட்டன் அரசு

தினமலர்  தினமலர்
மல்லையாவை இந்தியா அழைத்து வருவதில் சட்ட சிக்கல்கள்: பிரிட்டன் அரசு

லண்டன்: வங்கிக் கடன் மோசடி வழக்கில், பிரிட்டன் தப்பி சென்ற விஜய் மல்லையாவை, இந்தியாவுக்கு அழைத்து வருவதில் சட்ட சிக்கல்கள் இன்னும் தீர்க்கப்படாததால், அவரை அழைத்து வர தாமதம் ஏற்படலாம் என பிரிட்டன் அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கிங் பிஷர் ஏர்லைன்ஸ் அதிபர், விஜய் மல்லையா, வங்கிகளிடம், 9,000 கோடி ரூபாய் கடன் பெற்று, திருப்பிச் செலுத்தாமல், லண்டனுக்கு தப்பிச் சென்றார். இதையடுத்து அவர் மீது, நிதி மோசடி மற்றும் சட்ட விரோத பணப் பரிமாற்ற குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்நிலையில், சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்கில், விஜய் மல்லையாவை நாடு கடத்த, லண்டன் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டது.இதை எதிர்த்து, விஜய் மல்லையா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை, லண்டன் உயர் நீதிமன்றம், ஏப்., 20ல் உறுதி செய்தது. இதை எதிர்த்து, அவர் உச்ச நீதிமன்றத்தில் செய்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்நிலையில், பிரிட்டன் சட்டப்படி மல்லையாவை, 28 நாட்களுக்குள், அதாவது, ஜூன், 1க்குள், நாடு கடத்தும் உத்தரவில், அந்நாட்டு உள்துறை அமைச்சர், பிரீத்தி படேல் கையெழுத்திட வேண்டும். அந்த வகையில் வரும் 11ம் தேதியுடன் அந்தத் தேதி முடிகிறது. இந்நிலையில், சட்ட சிக்கல்கள் தீர்க்கப்படாததால், மல்லையாவை இந்தியாவுக்கு அனுப்புவதில் தாமதம் ஏற்படலாம் என பிரிட்டன் தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: மல்லையாவை இந்தியாவுக்கு அழைத்துச் செல்வதில் சட்டச் சிக்கல்கள் முழுமையாகத் தீர்க்கப்படாததால், தாமதம் ஏற்படலாம். அனைத்து சட்டச் சிக்கல்களையும் தீர்க்க வேண்டும். பிரிட்டன் சட்டப்படி, சட்டச் சிக்கல் தீராத வரை, யாரையும் நாட்டைவிட்டு அனுப்பக்கூடாது. இது மிகவும் ரகசியம் என்பதால் இதற்கு மேல் தெரிவிக்க இயலாது. சிக்கல் எப்போது தீரும் என தெரியவில்லை. ஆனால் விரைவாக சிக்கலை தீர்க்க முயற்சித்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை