'ம்... வட்டி எங்கே?' நிதி நிறுவனங்கள் மிரட்டல்: கடன் வாங்கியவர் கண்ணீர்

தினமலர்  தினமலர்
ம்... வட்டி எங்கே? நிதி நிறுவனங்கள் மிரட்டல்: கடன் வாங்கியவர் கண்ணீர்

திருப்பூர் மாவட்டத்தில், கடன் வசூலில் ஈடுபட்டுள்ள சில மைக்ரோ நிதி நிறுவனங்கள், பொதுமக்களை மிரட்டுவதாக புகார் எழுந்துள்ளது.ஊரடங்கால், வாழ்வாதாரம் இழந்து, பொதுமக்கள் பலர் தவிக்கின்றனர்.
ஊரடங்குக்கு முன்பு, திருப்பூர் மாவட்டத்தில், மைக்ரோ நிதி நிறுவனங்களிடம் குழுவினராகச் சேர்ந்து, பலர் கடன் பெற்றுள்ளனர். நெசவாளர்கள் உட்பட தொழிலாளர்கள், வியாபாரிகள், மகளிர் சுய உதவிக்குழுவினர் உள்ளிட்டோர், இதில் அடங்குவர்.கடந்த ஒரு வாரமாக, சில மைக்ரோ நிதி நிறுவனங்களைச் சேர்ந்த ஊழியர்கள், வீடு வீடாக சென்று, கடன் பெற்றவர்களிடம், கடனை திருப்பிச்செலுத்துமாறு மிரட்டுவதாக புகார் எழுந்துள்ளது.கடன் பெற்றவர்கள் கூறுகையில், ''கடன் தவணை மற்றும் வட்டி செலுத்துவதற்கு பொதுமக்களுக்கு அரசு அவகாசம் வழங்கியுள்ளது.

இது, மைக்ரோ நிதி நிறுவனங்கள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்களுக்கும் பொருந்தும். ஆனால், இதைப் பொருட்படுத்தாமல், கடனைத் திருப்பிச்செலுத்துமாறு நிர்பந்தம் செய்கின்றனர். வழக்கமாக, வாரம் அல்லது மாதந்தோறும் கடன் தவணை மற்றும் வட்டியைத் திருப்பிச்செலுத்துவது வழக்கம். கடன் பெற்றவர்களில் பலர் பெண்கள். பெண்கள் என்று கூடப் பார்க்காமல், ஊழியர்கள், இவர்களை மிரட்டுவது தொடர்கிறது.இத்தனைக்கும், இவர்களில் பலர், கடன் தொகையை தவணை தராமல் முறையாகச்செலுத்தி வருபவர்கள்.
இப்படியிருக்க, இன்னும், வாழ்வாதாரத்திற்கான வழியே துவங்காத நிலையில், கடன் தொகையை உடனடியாகத் திருப்பிச்செலுத்தச் சொல்வதில் என்ன நியாயம் இருக்கிறது? கடனைத் திருப்பிச் செலுத்துமாறு மிரட்டுபவர்கள் மீது நடவடிக்கை தேவை'' என்றனர்.போலீசார் கூறுகையில், ''முறைப்படிப் புகார் அளித்தால், நடவடிக்கை எடுக்கத் தயாராக உள்ளோம். ஆனால், பலர், மீண்டும் கடன் பெறுவதில் சிக்கல் ஏற்படும் என்று கருதி, புகார் அளிக்கத் தயங்குகின்றனர்'' என்றனர்.
உரிய நடவடிக்கை உண்டுவருவாய்த்துறையினர் கூறியதாவது:மகளிர் குழுக்கள் பெற்ற கடன் உட்பட, அனைத்துக் கடன் தொகைகளுக்கான மாதாந்திரத் தவணைத்தொகை செலுத்துவதற்கு, கடந்த மார்ச் 1 முதல் ஆக., 31 வரை, ஆறு மாத கால அவகாசம் அளிக்குமாறு, ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.மகளிர் குழுக்களுக்கு நுண்கடன் நிறுவனங்கள் வழங்கிய கடன் தொகைக்கான மாதாந்திரத் தவணைத்தொகையை அனுமதியளிக்கப்பட்ட கால அவகாசத்தின் அடிப்படையில், பெற்றுக்கொள்ள வேண்டும். மேலும், மகளிர் குழுக்களைத் தவணைத்தொகை செலுத்த ஆக., 31 வரை நிர்பந்திக்கக்கூடாது. அவ்வாறு நிர்பந்திக்கும் நுண் கடன் நிறுவனங்கள் மீது அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.- நமது நிருபர்

மூலக்கதை