'நாட்டில் சீர்திருத்தங்களை துவக்க கொரோனா வாய்ப்பு தந்துள்ளது'

தினமலர்  தினமலர்
நாட்டில் சீர்திருத்தங்களை துவக்க கொரோனா வாய்ப்பு தந்துள்ளது

புதுடில்லி:இந்தியா -- ஆஸ்திரேலியா உச்சி மாநாட்டில், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட்
மோரிசனுடன், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, பிரதமர் நரேந்திர மோடி உரையாடினார். 'அப்போது, நாட்டின் பல்வேறு துறைகளிலும், விரிவான சீர்திருத்த நடவடிக்கைகளை துவங்க, கொரோனா நெருக்கடி, வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்திருப்பதாக, அவர் தெரிவித்தார்.

ராணுவம், வர்த்தகம், சுகாதாரம் ஆகிய துறைகளில், இந்தியா -- ஆஸ்திரேலியா இடையிலான உறவை வலுப்படுத்தும் நோக்கத்தில், இரு நாடுகள் இடையிலான உச்சி மாநாடு, நேற்று
நடந்தது.இதில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர், ஸ்காட் மோரிசன், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக சந்தித்து, உரையாடினர்.

அப்போது, பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது:இந்தியா -- ஆஸ்திரேலிய உறவை, மேலும் வலுப்படுத்த, சரியான நேரத்தில், சரியான சந்தர்ப்பம் அமைந்துள்ளதாக நம்புகிறேன். இந்த உறவை, விரைவாகவும், விரிவாகவும் வலுப்படுத்துவதில், இந்தியா உறுதி கொண்டுள்ளது.
கொரோனா பாதிப்பால், உலகம் முழுதும், சமூக மற்றும் பொருளாதார ரீதியிலான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. ஒத்துழைப்புடன் கூடிய, கூட்டு முயற்சியால் மட்டுமே, இதிலிருந்து மீள முடியும். இந்தசந்தர்ப்பத்தில், மற்ற நாடுகளுடன் நல்லுறவை வலுப்படுத்துவது
அவசியமாகிறது.

நாட்டின் பல்வேறு துறைகளிலும், விரிவான சீர்த்திருத்தங்களை துவங்க, இந்த கொரோனா நெருக்கடி வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்திருப்பதாகவே கருதுகிறேன். இதன் முடிவுகள், விரைவில் தெரியவரும்.தொற்று தீவிரம்அடைந்த காலக்கட்டத்தில், ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இந்திய மக்கள், குறிப்பாக மாணவர்கள் மீது, அக்கறை எடுத்துக் கொண்டதற்கு,
ஆஸ்திரேலிய அரசுக்கு நன்றி.இவ்வாறு, அவர்கூறினார்.

ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் கூறுகையில், ''ஆஸ்திரேலியாவின்
நம்பிக்கைக்குரிய நண்பனாகவே, இந்தியா எப்போதும் இருந்து வருகிறது. இந்த உறவை, மேலும் விரிவாக்க, தற்போது நேரம் வந்துள்ளது,'' என்றார்.



கிச்சடி கேட்ட மோரிசன்

ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன், வட இந்திய சிற்றுண்டியான, 'சமோசா' மற்றும் மாம்பழ சட்னியை, தானே சமைத்து, தன் பெயரின் முதல் எழுத்துக்களை கொண்டு, அதற்கு, 'ஸ்காமோசா' என பெயரிட்டார். அந்த புகைப்படத்தை தன், 'டுவிட்டர்' பக்கத்திலும்
பதிவிட்டார். அதோடு, 'சைவ உணவுப் பழக்கம் கொண்ட நரேந்திர மோடியை,சந்திக்கும்போது, இந்த சமோசாவை பகிர விரும்புகிறேன்' என, குறிப்பிட்டார்.

இதற்கு, 'இந்திய பெருங்கடல் மூலம் இணைக்கப்பட்டுள்ள நாம், இந்திய சமோசாவினால்
ஒன்றுபடுவோம்' என, பிரதமர் மோடி பதில் பதிவிட்டார்.இந்நிலையில், நேற்றைய
உரையாடலின் முடிவில், 'நாங்கள் நேரில் சந்திக்கும் போது, மோடியின் அணைப்பையும்,
குஜராத்தின் பிரபல உணவான கிச்சடியை ருசிக்கவும் விரும்புகிறேன். அதற்கு முன், அதை
வீட்டில் சமைத்துப் பார்க்க உள்ளேன்' என, ஸ்காட் மோரிசன் தெரிவித்தார்.

இதற்கு பதில் அளித்த மோடி, 'குஜராத் மக்கள், நிச்சயம் மகிழ்ச்சி அடைவர். நாடு முழுதும்,
கிச்சடிபிரபலம். ஆனால், ஒவ்வொரு பகுதியில், அதற்கு வெவ்வேறு பெயர்கள் உள்ளன' என, விளக்கம் அளித்தார்.


மூலக்கதை