எல்லையில் சீனாவின் செயல்பாடுகள் குறித்த அறிக்கை சமர்பிப்பு!

தினமலர்  தினமலர்
எல்லையில் சீனாவின் செயல்பாடுகள் குறித்த அறிக்கை சமர்பிப்பு!

புது டில்லி: எல்லை பிரச்னை தொடர்பாக இந்தியா - சீனா இடையில் லெப்டினன்ட் ஜெனரல் அளவிலான பேச்சுவார்த்தை நடைபெற உள்ள நிலையில், கிழக்கு லடாக்கில் சீன ராணுவத்தின் கட்டமைப்பைப் பற்றி பாதுகாப்பு முகமைகள் அரசாங்கத்திற்கு விரிவான அறிக்கையை சமர்ப்பித்துள்ளன.


இந்தியாவின் லடாக் எல்லை பகுதியில் சீன ராணுவம் துருப்புகளை நிறுத்தியதாலும், ஹெலிகாப்டர் மூலம் ரோந்து சென்றதாலும், கடந்த 25 நாட்களாக இந்தியா - சீனா இடையேயான நடைமுறை எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பதற்றம் நீடிக்கிறது. பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன. இதில் ஜூன் 6-ம் தேதி லெப்டினன்ட் ஜெனரல் அளவிலான பேச்சுவார்த்தைகள் நடைபெறுவது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்திய பாதுகாப்பு முகமைகள் மத்திய அரசுக்கு லடாக்கில் சீன ராணுவ கட்டமைப்பைப் பற்றி விரிவான அறிக்கையை சமர்ப்பித்துள்ளன. அந்த அறிக்கையில், லடாக்கில் தற்போது நடந்து வரும் முன்னேற்றம் மற்றும் கிழக்கு லடாக்கின் பல்வேறு செக்டார்களில் சீன ராணுவம் எவ்வாறு துருப்புக்களை கொண்டு வந்தது என்பது குறித்த விவரங்களை அளித்துள்ளன. சீன ராணுவம் தனது எல்லையிலிருந்து நடைமுறை எல்லைக்கட்டுப்பாடு கோடு பகுதியில் எவ்வாறு விரைவாக தனது படைகளை வலிமையான ஆயுதங்களுடன் குவித்தது என்றும் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளனர்.


ஜூன் 6 அன்று நடைபெறவிருக்கும் லெப்டினென்ட் ஜெனரல் அளவிலான பேச்சுவார்த்தையின் போது, மே மாதம் தொடங்கிய பிரச்னைக்கு காரணமான விஷயங்களை விவாதிப்பார்கள். லே பகுதியில் செயல்படும் 14 கார்ப்ஸ் படையின் தலைவர் லெப்டினென்ட் ஜெனரல் ஹரிந்தர் சிங் இந்தியா சார்பில் இப்பேச்சுவார்த்தையில் பங்கேற்க உள்ளார்.

மூலக்கதை