சிதம்பரம் ஜாமினை எதிர்த்த சி.பி.ஐ., மனு தள்ளுபடி

தினமலர்  தினமலர்
சிதம்பரம் ஜாமினை எதிர்த்த சி.பி.ஐ., மனு தள்ளுபடி

புதுடில்லி:காங்கிரஸ் தலைமையிலான, ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், சிதம்பரம், நிதி அமைச்சராக பதவி வகித்தார். அப்போது, 2007ல், ஐ.என்.எக்ஸ்., மீடியா நிறுவனத்துக்கு, வெளிநாட்டில் இருந்து, 305 கோடி ரூபாய், அன்னிய முதலீடு பெறப்பட்டது. இதற்கு, சிதம்பரம் முறைகேடாக அனுமதி அளித்ததாகவும், இதன் மூலம், அவரும், அவரது மகன் கார்த்தியும் ஆதாயம் அடைந்ததாக, 2017ல், சி.பி.ஐ., வழக்குப் பதிவு செய்தது.

இந்த வழக்கு தொடர்பாக, கடந்த ஆண்டு ஆகஸ்டில், சி.பி.ஐ., அதிகாரிகள், சிதம்பரத்தை கைது செய்தனர். அவர், டில்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். சி.பி.ஐ., தாக்கல் செய்த வழக்கில், கடந்த ஆண்டு, அக்டோபர், 22ல், சிதம்பரத்துக்கு ஜாமின் வழங்கி, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.சிதம்பரத்துக்கு வழங்கப்பட்ட ஜாமினை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில், சி.பி.ஐ., தரப்பில், சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு, நீதிபதிகள் பானுமதி, ஏ.எஸ்.போபண்ணா ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன், கடந்த, 2ம் தேதி, விசாரணைக்கு வந்தது. அப்போது, 'கடந்த ஆண்டு வழங்கப்பட்ட ஜாமினை, மறு பரிசீலணை செய்ய வேண்டிய அவசியம் இல்லை' என தெரிவித்த நீதிபதிகள், சி.பி.ஐ., தாக்கல் செய்த மனுவை, தள்ளுபடி செய்தனர். இந்த தகவல், உச்ச நீதிமன்ற அதிகாரபூர்வ இணையதளத்தில், நேற்று வெளியிடப்பட்டது.

மூலக்கதை