'தேஜஸ்-என்' போர் விமானம்: உள்நாட்டில் தயாரிக்க ஒப்புதல்

தினமலர்  தினமலர்
தேஜஸ்என் போர் விமானம்: உள்நாட்டில் தயாரிக்க ஒப்புதல்

புதுடில்லி:அதிநவீன 'தேஜஸ்-என்' போர் விமான சோதனை வெற்றி பெற்றதை அடுத்து, அதை உள்நாட்டில் தயாரிக்க, விமான மேம்பாட்டு அமைப்பு ஒப்புதல் வழங்கியுள்ளது.

இது குறித்து, ராணுவ அமைச்சக அதிகாரி ஒருவர் கூறியதாவது:உள்நாட்டில், சோதனைக்காக, அதிநவீன தேஜஸ்-என் போர் விமானம் தயாரிக்கப்பட்டுள்ளது. இரட்டை இன்ஜின் பொருத்தப் பட்ட இந்த விமானம், விண்ணில் ஏவுகணை தாக்குதல் நடத்தும் ஆற்றல் கொண்டது.கோவா கடற்பகுதியில், இந்திய கடற்படைக்குச் சொந்தமான, ஐ.என்.எஸ்.விக்ரமாதித்யா விமானம் தாங்கி கப்பலில், இந்த விமானம் சோதித்து பார்க்கப்பட்டது. விமானம், மணிக்கு, 244 கி.மீ., வேகத்தில் பறந்து வந்த போதிலும், கப்பல் தளத்தில் இறங்கும்போது, 2 விநாடிகளில், 90 மீட்டர் துாரத்திற்குள் சென்று நின்றது.

இதே போல, விமானம், பலமுறை பறக்க விடப்பட்டதில், சோதனை வெற்றிபெற்றதாக தெரிவிக்க பட்டது. இதையடுத்து, ராணுவ அமைச்சர், ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற, விமான மேம்பாட்டு நிறுவனத்தின், ஆண்டு பொதுக்கூட்டத்தில், தேஜஸ்-என் போர் விமானத்தை, உள்நாட்டில் தயாரிக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.இத்திட்டத்திற்கு, 7,௦௦0-8,000 கோடி ரூபாய் செலவாகும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. அடுத்த ஆறு ஆண்டுகளில், இவ்விமானம், இந்திய கடற்படையின் விமானம் தாங்கி கப்பலுடன் இணைக்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

மூலக்கதை