மல்லையா நாடு கடத்தல் தாமதமாகும் அரசியல் அடைக்கலம் கேட்க திட்டம்

தினமலர்  தினமலர்
மல்லையா நாடு கடத்தல் தாமதமாகும் அரசியல் அடைக்கலம் கேட்க திட்டம்

புதுடில்லி; சட்டச் சிக்கல் இருப்பதால், தொழில் அதிபர் விஜய் மல்லையாவை, நம் நாட்டுக்கு நாடு கடத்தி அழைத்து வருவதில் மேலும் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், அவர், பிரிட்டனில் அரசியல் அடைக்கலம் கேட்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

'கிங் பிஷர்' விமான நிறுவனம் மற்றும் மதுபான நிறுவனம் நடத்தி வந்தவர் விஜய் மல்லையா, 64. வங்கிகளில், 9,000 கோடி ரூபாய் கடன் வாங்கி, அவற்றை திரும்ப செலுத்தாமல், ஐரோப்பிய நாடான பிரிட்டனுக்கு தப்பி ஓடினார்.

சி.பி.ஐ., மற்றும் அமலாக்க துறை அதிகாரிகள், அவர் மீது வழக்கு தொடர்ந்தனர். பிரிட்டனிலிருந்து, இந்தியாவுக்கு நாடு கடத்தி வருவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டது.இதை எதிர்த்து, லண்டன் நீதிமன்றத்தில் மல்லையா வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த லண்டன் உயர் நீதிமன்றம், மல்லையாவை நாடு கடத்த அனுமதி அளித்தது.இதை எதிர்த்து, பிரிட்டன் உச்ச நீதிமன்றத்தில் மல்லையா மனு தாக்கல் செய்வதற்கும் அனுமதி மறுக்கப்பட்டது.

இந்த தீர்ப்பு வெளியான, 28 நாட்களுக்குள் மல்லையாவை நாடு கடத்த வேண்டும் என்பதால், அதற்கான நடவடிக்கைகளில், சி.பி.ஐ., தீவிரம் காட்டியது. மல்லையாவை நாடு கடத்த அனுமதி அளிக்கப்பட்டு விட்டதாகவும், மும்பையில் உள்ள சிறைக்கு, அவர் அழைத்து வரப்படுவதாகவும், நேற்று முன்தினம் பரபரப்பு செய்திகள் வெளியாகின.

ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. இது குறித்து, சி.பி.ஐ., அதிகாரிகள் கூறியதாவது:நாடு கடத்துவதிலிருந்து தப்பிக்க, மல்லையா, தனக்குள்ள அனைத்து சட்ட வாய்ப்புகளையும் பயன்படுத்த முயற்சிக்கிறார். அவரை நாடு கடத்துவதற்கான அதிகாரப்பூர்வ அனுமதியை, பிரிட்டன் அரசு, இன்னும் எங்களிடம் தரவில்லை.மல்லையாவுக்கு இன்னும் சில சட்ட வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது. அவர் ஒரு தொழில் அதிபர் என்பதாலும், ராஜ்யசபா எம்.பி.,யாக இருந்தவர் என்பதாலும், பிரிட்டனில் அரசியல் அடைக்கலம் தேட முயற்சிக்கிறார்.

ஏற்கனவே, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தொழில் அதிபர்கள் பிரிட்டனில் அரசியல் அடைக்கலம் புகுந்துள்ளனர். ஆனாலும், மல்லையாவை நாடு கடத்த, பிரிட்டன் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதும், உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய அனுமதி மறுக்கப்பட்டுள்ளதும், நமக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. எப்படி இருந்தாலும், மல்லையாவை உடனடியாக நாடு கடத்துவதற்கு இப்போது வாய்ப்பில்லை. அந்த நடவடிக்கை, மேலும் தாமதமாகலாம். இவ்வாறு, அதிகாரிகள் தெரிவித்தனர்.சட்டச் சிக்கல் என்ன?மல்லையா விவகாரம் குறித்து, பிரிட்டன் துாதரக அதிகாரி ஒருவர் கூறியதாவது:பிரிட்டன் சட்டப்படி, ஒருவரை நாடு கடத்த வேண்டுமானால், அவர் மீது, வேறு எந்த விதமான சட்டப் பிரச்னையும் இருக்கக் கூடாது. நாடு கடத்துவதை எதிர்த்து, மல்லையா, பிரிட்டன் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய அனுமதி மறுக்கப்பட்டாலும், அவருக்கு வேறு ஒரு சட்டப் பிரச்னை உள்ளது. அதற்கு தீர்வு காணாமல், அவரை நாடு கடத்த முடியாது. அது என்ன சட்டப் பிரச்னை என்பதை கூற முடியாது; அது, மிகவும் ரகசியமானது. எனவே, இந்த விவகாரம் இன்னும் எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் என கூற முடியாது. ஆனாலும், மிக விரைவில் பிரச்னையை தீர்க்க, முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.

மூலக்கதை