ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் 'ஐ லவ் கோவை!' பணிகள் மீண்டும் வேகம்

தினமலர்  தினமலர்
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஐ லவ் கோவை! பணிகள் மீண்டும் வேகம்

கோவை:'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில், பணிகள் மீண்டும் வேகமெடுத்துள்ளன. கோவை உக்கடம் குளக்கரையில், 'செல்பி' கார்னர் அமைக்கும் பணி நடக்கிறது. இரவில் மிளிரும் வகையில், வண்ண விளக்குகள் அமைக்கப்படுகின்றன. இரு மாதங்களுக்குள் பணிகளை முடிக்க, ஒப்பந்த நிறுவனத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில், கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள, 9 குளங்கள் மேம்படுத்தப்படுகின்றன.இதில், உக்கடம் பெரிய குளம் ஒரு பகுதி மற்றும் வாலாங்குளத்தில் ஒரு பகுதியில் பணிகளை முடித்து, பயன்பாட்டுக்கு கொண்டு வர, தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.கடந்த மார்ச் மாதமே பணியை முடித்து, கோடை விடுமுறைக்கு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வழங்க, மாநகராட்சி திட்டமிட்டு இருந்தது. ஊரடங்கால், கட்டுமான பணிகள் முடங்கின.
தற்போது தளர்வு வழங்கியுள்ளதால், இரு மாதங்களுக்குள் பணிகளை முடிக்க, ஒப்பந்த நிறுவனத்துக்கு, அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. பணிகள் மீண்டும் துவக்கப்பட்டுள்ளன.குளக்கரையில், 'ஐ லவ் கோவை' என, ஆங்கில எழுத்துக்களால், 'செல்பி' கார்னர் உருவாக்கும் பணி நடந்து வருகிறது. இரவில் மிளிரும் வகையில், வண்ண விளக்குகள் அமைக்கும் பணியும் நடந்து வருகிறது.
மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'கோவையில் உள்ள, 9 குளங்கள் ரூ.377.54 கோடியில் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. முதல்கட்டமாக, உக்கடம் பெரியகுளத்தில், 1.9 கி.மீ., துாரத்துக்கு, பணிகள் நடந்து வருகின்றன. நடைபாதை, நடைபயிற்சிக்கான வழி, சைக்கிள் பாதை, குழந்தைகள் விளையாடுவதற்கான இடம், படகு சவாரி, திறந்தவெளி அரங்கம், ஸ்நாக்ஸ் சாப்பிடுவதற்கான தனியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இன்னும் இரு மாதங்களுக்குள் பணியை முடித்து, பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்' என்றனர்.

மூலக்கதை