‘பகலிரவு’ எங்களுக்கு சாதகம் * ஸ்டீவ் ஸ்மித் நம்பிக்கை | ஜூன் 01, 2020

தினமலர்  தினமலர்
‘பகலிரவு’ எங்களுக்கு சாதகம் * ஸ்டீவ் ஸ்மித் நம்பிக்கை | ஜூன் 01, 2020

 மும்பை: ஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணி மூன்று ‘டுவென்டி–20’, நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. இதற்கான அட்டவணையை ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டு வெளியிட்டது.

இதில் வரும் டிச., 11ல் அடிலெய்டில் நடக்கும் போட்டி, பகலிரவு டெஸ்டாக நடக்க உள்ளது. இதுகுறித்து ஆஸ்திரேலிய அணி வீரர் ஸ்டீவ் ஸ்மித் 30, கூறியது:

கடந்த ஆண்டு கோல்கட்டாவில் நடந்த பகலிரவு டெஸ்டில் இந்திய அணி சிறப்பாக விளையாடியது. இது சற்று வித்தியாசமாக இருக்கும். ஆனாலும் இந்திய அணி பேட்ஸ்மேன்கள், ‘பிங்க்’ பந்தில் (இளஞ்சிகப்பு) கடினமான நேரத்திலும் சிறப்பாக செயல்பட்டனர். இந்திய பவுலர்களும் தங்கள் பங்கிற்கு அசத்தினர்.

இந்திய அணி வீரர்கள் உலகத் தரம் வாய்ந்தவர்கள். சூழ்நிலை எப்படி இருந்தாலும் அதற்கேற்ப தங்களை மாற்றிக் கொள்வதில் வல்லவர்கள். இதனால் இரு அணிகளுக்கும் இடையில் கடும் போட்டி காணப்படும் என எதிர்பார்க்கிறேன். அதேநேரம், இந்திய அணியை விட, நாங்கள் அதிகமான பகலிரவு டெஸ்டில் விளையாடியுள்ளோம். இது எங்களுக்கு சற்று சாதகம் தான்.

டெஸ்ட் தொடரில் முதல் போட்டி பிரிஸ்பேனில் நடக்க உள்ளது. இங்கு எங்கள் அணி எப்போதும் மிகச் சிறப்பாக செயல்பட்டுள்ளது. இந்த இடம் எங்களது கோட்டை. இந்தியாவுக்கு எதிரான தொடரின் முதல் போட்டியை இங்கு விளையாட வேண்டும் என்பது எங்களது நீண்ட நாள் விருப்பம்.

இவ்வாறு அவர் கூறினார்.

 

பாராட்டு

ஸ்மித் கூறுகையில்,‘‘ இந்திய அணியின் கோஹ்லியை பார்த்து வியந்துள்ளேன். மிகச் சிறப்பான வீரர். கிரிக்கெட்டுக்கு என்றே பிறந்தவர் போல விளையாடுகிறார். போட்டிக்கு ஏற்ப உடற்தகுதியை நன்கு பராமரிக்கிறார்,’’ என்றார்.

ஐ.பி.எல்., ஆசை

ஸ்மித் கூறுகையில்,‘‘தேசத்திற்காக ‘டுவென்டி–20’ அல்லது ஒருநாள் உலக கோப்பை தொடரில் பங்கேற்க வேண்டும் என்றால் அதற்குத் தான் முக்கியத்துவம் தருவேன். ஒருவேளை இது நடக்காத நிலையில், ஐ.பி.எல்., தொடர் நடந்தால் கட்டாயம் பங்கேற்பேன். உள்ளூர் தொடர்களில் இது சிறப்பானது,’’ என்றார்.

ஆஸி., வீரர்கள் பயிற்சி

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்படாத நாடு ஆஸ்திரேலியா. இங்கு 7,000க்கும் அதிகமானவர்கள் தான் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் உள்ளூர் கிரிக்கெட் சீசன் விரைவில் துவங்கும் எனத் தெரிகிறது. இதற்குத் தயாராகும் வகையில் டேவிட் வார்னர், மிட்சல் ஸ்டார்க் உள்ளிட்டோர் ஆளில்லாத சிட்னி மைதானத்தில் நேற்று முதல் பயிற்சியை துவக்கினர்.

மூலக்கதை