அமெரிக்காவின் மிரட்டலால் முடிவை மாற்றிய சீனா..!

தினமலர்  தினமலர்
அமெரிக்காவின் மிரட்டலால் முடிவை மாற்றிய சீனா..!

பெய்ஜிங்: அமெரிக்காவிற்கு இயக்கப்படும் சீன விமான நிறுவனங்களுக்கு தடை விதிக்க இருப்பதாக அமெரிக்கா அறிவித்த நிலையில், குறிப்பிட்ட நிபந்தனைகளுடன் அமெரிக்க விமானங்களை அனுமதிப்பதாக சீனா அறிவித்துள்ளது.

கொரோனா தொற்று, வர்த்தக ஒப்பந்த விவகாரங்களில் அமெரிக்கா - சீனா இடையே பனிப்போர் நீடித்து வரும் நிலையில், விமானச்சேவையை மையமாக கொண்டு புதிய மோதல்போக்கு எழுந்துள்ளது. சீனாவுக்கு விமானச்சேவையை துவங்க அமெரிக்க விமான நிறுவனங்களுக்கு தொடர்ச்சியாக அனுமதி மறுக்கப்பட்டதால், அமெரிக்காவிற்கு இயக்கப்படும் சீனாவை சேர்ந்த 7 விமானச்சேவை நிறுவனங்களுக்கு ஜூன் 16 முதல் தடை விதிக்கப்படுவதாக அமெரிக்க போக்குவரத்து துறை (டாட்) அறிவித்தது. மொத்தம் 7 சீன விமானச்சேவை நிறுவனங்களில் தற்போது ஏர் சைனா, சைனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் உள்ளிட்ட 4 விமான நிறுவனங்கள் மட்டுமே அமெரிக்காவிற்கு விமானங்களை இயக்கி வருகின்றன.

அமெரிக்க விமான நிறுவனங்கள் ஜூன் 1 முதல் விமானச்சேவையை துவங்க அனுமதி கேட்டிருந்தன. ஆனால் சீன அரசு, கோரிக்கையை ஏற்க மறுத்திருப்பது எங்கள் விமான போக்குவரத்து ஒப்பந்தத்தை மீறுவதாகும் . யுனைடெட் மற்றும் டெல்டா விமான நிறுவனங்கள் , விமானச்சேவையை துவங்குவது தொடர்பாக மே மாத துவக்கத்தில் விண்ணப்பித்திருந்தோம். ஆனால் சீனாவின் சிவில் விமானப்போக்குவரத்து ஆணையம் (சி.ஏ.ஏ.சி) இதுவரை அனுமதி தரவில்லை என டாட் தெரிவித்துள்ளது.


மார்ச்.12ம் தேதியை அடிப்படையாக கொண்டு விமான நிறுவன செயல்பாட்டை வரம்பை தீர்மானிக்க சி.ஏ.ஏ.சி தீர்மானித்தது. கொரோனா தொற்று காரணமாக அப்போது சீனாவுக்கான அனைத்து விமானச்சேவையையும் அமெரிக்கா ரத்து செய்திருந்தது. ஆனால் சீன விமானச்சேவை நிறுவனங்கள் அமெரிக்காவிற்கு விமானச்சேவையை தொடர்ந்து வந்தன. தன்னிச்சையான அடிப்படை தேதியால் சீனாவுக்கு மீண்டும் விமானச்சேவையை துவங்க தயாராக உள்ள அமெரிக்க விமான நிறுவனங்களை தடுப்பதாக டாட் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.

முடிவை மாற்றி கொண்ட சீனா


இந்நிலையில் மார்ச்.12ம் தேதி பட்டியலில் இல்லாத அனைத்து வெளிநாட்டு விமானச்சேவை நிறுவனங்களுங்கும் வாரத்திற்கு ஒருமுறை சீனாவுக்கு விமானத்தை இயக்க அனுமதிக்கப்படுவதாக சி.ஏ.ஏ.சி இன்று (ஜூன் 4) அறிவித்துள்ளது.
சீனாவுக்கு வரும் அனைவரும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தபடுவர் என்றும், தொடர்ந்து 3 வாரங்கள் பயணிகளுக்கு கொரோனா தொற்று இல்லையெனில் வாரத்திற்கு கூடுதலாக ஒரு விமானங்கள் இயக்க அனுமதிக்கப்படும். ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட பயணிகளுக்கு கொரோனா உறுதியானால், வெளிநாட்டு, உள்நாட்டு விமான நிறுவனங்கள் குறைந்தபட்சம் ஒரு வாரம் அனுமதிக்கப்பட மாட்டாது என தெரிவித்துள்ளது.

மூலக்கதை