கேரளாவில் யானையை வெடி வைத்து கொன்ற மனித மிருகங்களை பற்றி துப்பு கொடுத்தால் ரூ.1 லட்சம் சன்மானம் : தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அறிவிப்பு

தினகரன்  தினகரன்
கேரளாவில் யானையை வெடி வைத்து கொன்ற மனித மிருகங்களை பற்றி துப்பு கொடுத்தால் ரூ.1 லட்சம் சன்மானம் : தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அறிவிப்பு

திருவனந்தபுரம் : கேரளாவில் யானையை வெடி வைத்து கொன்ற மர்மநபர்கள் பற்றி துப்பு கொடுத்தால் ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று 2 தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அறிவித்துள்ளன.கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் அமைதிப்பள்ளத்தாக்கு உள்ளது. இப்பகுதியில் தேசிய பூங்காவும் உள்ளது. இங்கு ஏராளமான அரிய வன விலங்குகள் உள்ளன. இதற்கிடையே, யானை ஒன்று அடிக்கடி ஊருக்குள் வந்து வாழை,  கரும்பு உட்பட விவசாய பயிர்களை சாப்பிட்டு செல்லுமாம். இதனால் கோபமடைந்த அப்பகுதியை சேர்ந்த மர்ம நபர்கள் ஊருக்குள் வந்த யானைக்கு அன்னாசி பழத்தில் வெடியை மறைத்து வைத்து கொடுத்துள்ளனர்.இதை யானை  அன்னாச்சி பழத்தை சாப்பிட்டபோது வெடி வெடித்துள்ளது. இதில் வாய் சிதறி பலத்த காயம் அடைந்தது. இதனால் அந்த யானைக்கு பல நாட்களாக சாப்பிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. யானை நாளுக்கு நாள் மெலிந்தது. வாயில் ஏற்பட்ட காயத்தில் ஈக்கள்  மொய்ப்பதில் இருந்து தப்பிக்க யானை தண்ணீருக்குள் இறங்கி தலையை தண்ணீருக்குள் தாழ்த்தி நின்றுள்ளது.இதையடுத்து, யானையை காப்பாற்ற, கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு தண்ணீரில் இருந்து கரையேற்ற முயன்றனர். ஆனால் முயற்சி பலனளிக்கவில்லை. தண்ணீரை விட்டு வெளியே வரமறுத்து நின்ற யானை சிறிது நேரத்தில் இறந்தது. தொடர்ந்து யானை உடல் வனப்பகுதிக்குள் கொண்டு சென்று பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. அப்போதுதான் அது கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. இது வன அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பின்னர் யானை எரிக்கப்பட்டது.  அன்னாசி பழத்தில் வெடியை வைத்து இரக்கமின்றி யானை கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். யானை கொல்லப்பட்ட சம்பவம் குறித்து மன்னார் காடு மண்டல வன அதிகாரி சுனில்குமார் விசாரணை மேற்கொண்டுள்ளார். இது தொடர்பாக 2 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது.இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாகத் துப்பு கொடுப்பவர்களுக்கு ரூபாய் 1 லட்சம் சன்மானமாக வழங்கப்படும் என தனியார் தொண்டு நிறுவனங்கள் அறிவித்துள்ளது.இந்த விவகாரம் தொடர்பாக, பதியப்பட்டுள்ள வழக்கு தொடர்பாக விளக்கி உள்ள வனவிலங்கு எஸ்.ஓ.எஸ்., யானை என்.ஜி.ஓ என்ற அந்த 2 தொண்டு நிறுவனங்கள் வழக்கு தொடர்பாகத் தகவல் தெரிந்தவர்கள் தங்களுக்குத் தெரிந்த தகவலைத் தெரிவித்து பணத்தைப் பெற்றுக் கொள்ளவும் எனக் கேட்டுக் கொண்டுள்ளது. துப்பு கொடுக்க விரும்புவோர்  9971699727 அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரி மூலம் தொடர்பு கொள்ளலாம் என்று வனவிலங்கு எஸ்ஓஎஸ் அறிவித்துள்ளது.

மூலக்கதை