சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டத்துக்கு தடை விதித்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்கக் கோரி திட்ட மேலாளர் மனு: உச்சநீதிமன்றத்தில் விரைவில் விசாரணை

தினகரன்  தினகரன்
சேலம்  சென்னை 8 வழிச்சாலை திட்டத்துக்கு தடை விதித்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்கக் கோரி திட்ட மேலாளர் மனு: உச்சநீதிமன்றத்தில் விரைவில் விசாரணை

டெல்லி: சேலம்-சென்னை 8 வழிச்சாலை வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் உச்சநீதிமன்றத்தில் திட்ட மேலாளர் மனுத்தாக்கல் செய்துள்ளார். மத்திய அரசின் பாரத் மாலா திட்டத்தின் கீழ் ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பில் சேலம்-சென்னை இடையே 8 வழிச்சாலை திட்டம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இந்த 8 வழிச்சாலை திட்டத்துக்காக சேலம், தர்மபுரி, வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் 1900 ஹெக்டேர் பரப்பளவு நிலத்தை கையகப்படுத்த தமிழக அரசு அறிவிப்பாணை வெளியிட்டது. இதற்காக ஏராளமான விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாக விவசாயிகள், சமூக ஆர்வர்லர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் என அனைத்து தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த திட்டத்துக்கு தடை விதிக்க கோரி பாதிக்கப்பட்ட நில உரிமையாளர்கள், விவசாயி கிருஷ்ணமூர்த்தி, பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், வக்கீல் சூர்யபிரகாசம் உள்ளிட்டோர் சார்பில் 50-க்கும் மேற்பட்ட மனுக்கள் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு 8 வழிச்சாலை பசுமைதிட்டம் தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த அறிவிப்பாணையை ரத்து செய்து உத்தரவிட்டது. இதனை எதிர்த்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. தமிழக அரசும் சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளது. இதுவரை அந்த வழக்கின் விசாரணை என்பது நடைபெறவில்லை. உச்சநீதிமன்றமும் இது தொடர்பாக நோட்டீஸ் அனுப்பி உத்தரவு பிறப்பித்துள்ளது. பல மாதங்களாக இந்த வழக்கு என்பது  நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதன் காரணமாக 8 வழிச்சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து நடத்த முடியாமல் இருக்கிறது. தற்போது உள்ள சூழ்நிலையில் சேலம்-சென்னை இடையேயான 8 வழிச்சாலை திட்டம் செயல்படுத்தக்கூடிய ஒரு கட்டாயத்தில் நாங்கள் இருக்கிறோம். இது முக்கியத்துவம் வாய்ந்த திட்டமாக இருக்கிறது. எனவே அந்த வழக்கை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று மேலாளர் இடைக்கால மனுவை தாக்கல் செய்துள்ளார். இவரது கோரிக்கையை ஏற்ற உச்சநீதிமன்றம் தற்போதைய சூழ்நிலையில் உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமா என தெரியவில்லை. அடுத்த வாரம் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது தான் தடை செய்யப்பட சேலம் -சென்னை இடையேயான 8 வழிச்சாலை திட்டத்திற்கு அனுமதி வழங்குமா? தடை தொடருமா? என்பது தெரியவரும்.

மூலக்கதை