நிசர்கா புயலுக்கு தப்பிய மும்பை மாநகரம் கனமழையால் தத்தளிப்பு: தானே, புனே, பால்கர் ஆகிய நகரங்களும் முடக்கம்

தினகரன்  தினகரன்
நிசர்கா புயலுக்கு தப்பிய மும்பை மாநகரம் கனமழையால் தத்தளிப்பு: தானே, புனே, பால்கர் ஆகிய நகரங்களும் முடக்கம்

மும்பை: நிசர்கா புயலுக்கு தப்பிய மும்பை மாநகரம் தற்போது இடைவிடாது கொட்டும் கனமழையால் தத்தளித்து வருகிறது. மும்பை மாநகரில் இன்று அதிகாலை முதலே மழை வெளுத்து வாங்கி வருகிறது. அங்கு விமான நிலையம் அமைந்துள்ள சாந்தாகுரூஸ், கொலாபா உள்ளிட்ட பல இடங்களில் விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. மதுங்கா கிங் சர்கிள், சியோன் மற்றும் மும்பையின் பிற தாழ்வான இடங்களில் இடுப்பளவுக்கு மழைநீர் தேங்கியுள்ளது. இதனால், சாலையில் பேருந்து, லாரி போன்ற வாகனங்கள் தத்தளிக்கின்றன. சில மணி நேரங்களிலேயே கொலாபாவில் அதிகபட்சமாக 50 மி.மீ மழையும், சாந்தாகுரூஸில் 25 மி.மீ மழையும் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மும்பை மட்டுமின்றி அருகில் உள்ள தானே, புனே, ராய்கட், பால்கர் ஆகிய நகரங்களிலும் கனமழை பெய்து வருகிறது. மும்பையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை நீடிக்கும் என்றும், காலையில் பலத்த காற்றுடன் மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. முன்னதாக, மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட் மாவட்டத்தில் அலிபாகில் நேற்று கரையை கடந்த நிசர்கா புயலால் 3 பேர் பலியாகிவிட்டனர். மும்பைக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில் அது எதிர்பார்த்ததை விட சற்று குறைவான பாதிப்பையே ஏற்படுத்தியது. இந்தியாவில் கொரோனா பாதித்த மாநிலங்களில் முதலிடத்தில் மகாராஷ்டிரா உள்ளது. இங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நோயை கட்டுப்படுத்தும் முயற்சி நடந்து கொண்டிருக்கும் நிலையில் நிசர்கா புயல் பீதியை கிளப்பியது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை