40 லட்சத்தை கடந்த பரிசோதனைகள்; மத்திய சுகாதாரத்துறை பெருமிதம்

தினமலர்  தினமலர்
40 லட்சத்தை கடந்த பரிசோதனைகள்; மத்திய சுகாதாரத்துறை பெருமிதம்

புதுடில்லி : 'நாட்டில், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரை கண்டறிய மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் எண்ணிக்கை, 40 லட்சத்தை கடந்துள்ளது' என, மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.



மத்திய சுகாதாரத்துறையின் அறிக்கை: இந்தியாவில், 41 லட்சத்து, 3,233 மாதிரிகள், இதுவரை பரிசோதிக்கப்பட்டுள்ளன. நாடு முழுதும் உள்ள, 480 அரசு மற்றும், 208 தனியார் ஆய்வகங்களில், பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. பரிசோதனை திறனை, இரண்டு லட்சமாக உயர்த்தும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.கொரோனா வைரஸ் பாதிப்பில் குணமடைந்தோரின் விகிதம், 48.31 ஆக உள்ளது. பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்க, நாடு முழுதும், 952 சிறப்பு மருத்துவமனைகள் இயங்கி வருகின்றன.



இங்கு, ஒரு லட்சத்து, 66 ஆயிரத்து, 332 தனிமை படுக்கைகளும், 21 ஆயிரத்து, 393 அவசரப் பிரிவு படுக்கைகளும், 72 ஆயிரத்து, 762 ஆக்ஸிஜன் அமைப்புடன் கூடிய படுக்கைகளும் உள்ளன. இதைத்தவிர, 2,391 சிறப்பு சுகாதார மையங்களில், ஒரு லட்சத்து, 34 ஆயிரத்து, 945 தனிமை படுக்கைகள், 11 ஆயிரத்து, 27 அவசரப் பிரிவு படுக்கைகள், 46 ஆயிரத்து, 875 ஆக்ஸிஜன் அமைப்புடன் கூடிய படுக்கைகள் உள்ளன.

மாநில, யூனியன் பிரதேச அரசுகளுக்கும், மத்திய அரசின் கீழ் இயங்கும் நிறுவனங்களுக்கும், இதுவரை, 125.28 லட்சம், 'என் 95' முகக் கவசங்கள் மற்றும், 101.54 லட்சம், தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களும், மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை