குட்டீசுடன் சொந்தக்காரங்க வீட்டுக்கு போகாதீங்க!

தினமலர்  தினமலர்
குட்டீசுடன் சொந்தக்காரங்க வீட்டுக்கு போகாதீங்க!

திருப்பூர் : 'உறவினர் வீடுகளுக்கு, குழந்தைகளுடன் படையெடுப்பதற்கு, இது சிறந்த தருணம் அல்ல,' என்று சுகாதாரத்துறையினர் எச்சரிக்கின்றனர்.

ஊரடங்கு, ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டாலும், மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பும் வகையில், அரசு, பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது. பஸ், ரயில் போக்குவரத்து துவங்கியிருக்கிறது.வழக்கமாக, ஏப்., மே மாதங்களில், பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டதும், தாத்தா, பாட்டி மற்றும் உறவினர் வீடுகளுக்கு, குழந்தைகள் செல்வது வழக்கத்தில் இருக்கிறது. மார்ச் 25 முதலே, பள்ளிகள் செயல்படவில்லை என்றாலும், இந்தாண்டு, இதற்கான வாய்ப்பு, குழந்தைகளுக்கு கிடைக்கவில்லை.தற்போது, பஸ்கள் இயங்க துவங்கியுள்ள நிலையில், குழந்தைகளை தாத்தா, பாட்டி மற்றும் உறவினர் வீடுகளுக்கு அனுப்புவதில், பெற்றோர் பலர் ஆர்வத்துடன் உள்ளனர்.

சுகாதாரத் துறையினர் கூறியதாவது:பஸ், ரயில் போக்கு வரத்து மட்டுமின்றி, பிற வாகனங்கள் இயங்குவதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படாததை, இயல்பாக எடுத்துக்கொண்டு, குழந்தைகளை உறவினர் வீடுகளுக்கு அனுப்புவதை, முடிந்தவரை, பெற்றோர் தவிர்ப்பது நல்லது.உறவினர் வீட்டிற்கு செல்வது குழந்தைகளுக்கு நல்ல மாற்றம் தான். ஆனால், தற்போதுள்ள நிலையில், இது தொற்றுக்கு வழிவகுத்துவிடும். இது, நாமே வலிந்து, துன்பத்தைத் தேடிக்கொள்வதாக அமைந்துவிடக்கூடாது. ஊரடங்குத் தளர்வைப் பயன்படுத்தி, குழந்தைகள் அதிகளவில் வெளியே சுற்ற விரும்புவர். குறிப்பாக, பெற்றோர் கடைகளுக்கோ, வேறு இடங்களுக்கோ செல்லும்போது, வாகனத்தில் வர விரும்புவர்.

அத்தியாவசிய காரணங்களுக்காக அன்றி, ஒருபோதும், குழந்தைகளை 'சும்மா' வெளியே அனுப்ப வேண்டாம்.ஆரோக்கியத்தில் அக்கறைஇத்தருணத்தில், குழந்தைகளின் உணவு மற்றும் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்த வேண்டும். காய்கறி, கீரை, இறைச்சி போன்ற சத்தான உணவுகளைக் குழந்தைகளுக்கு வழங்கலாம்.மொபைல் போனுக்கு அடிமையாகாமல், பார்த்து கொள்வதும் முக்கியம். ஆன்லைன் மூலம், பாடங்களை படிக்க வைக்கலாம் என்பதில் அக்கறை காட்டுவதை விட, பொது அறிவு, செஸ் உள்ளிட்ட விளையாட்டுகள் போன்றவற்றில் அவர்களது மனதைத் திசைதிருப்பலாம். இது, அவர்களது மனதையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

மூலக்கதை